வெளிநாடொன்றிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது
வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கண்டு பிடிக்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள்
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இருந்து வத்தளை மாகொல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய வர்த்தகர் சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது அவர் கொண்டுவந்த பொதிகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்ததில்,01 கிலோ 314 கிராம் எடையுள்ள 14 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றம் விடுத்த உத்தரவு
இவற்றின் பெறுமதி ரூபா 270 இலட்சம் என சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
கைதான வர்த்தகர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
