பெருந்தோட்டத்துறை மக்களுக்கான காணி உரிமை பற்றிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்று விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது - ஜீவன் தொண்டமான்
இலங்கையில் பெருந்தோட்டத்துறை மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மாத்தளை ரத்வத்தை தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இந்தநிலையில், மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்டப் பகுதியில் இருந்து அங்கு வசித்த மக்களை அத்துமீறி வெளியேற்றியமை தொடர்பில், உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குடியிருப்பை சேதப்படுத்தியமை
மாத்தளை, ரத்வத்தை தோட்டப்பகுதியில் தோட்டத் தொழிலாளர் ஒருவரின் தற்காலிக குடியிருப்பு ஒன்றை உதவி முகாமையாளர் ஒருவர் சேதப்படுத்துவது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில், வெளியாகியிருந்தது.
குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (20)நேரில் சென்றிருந்திருந்தார்.
இதன்போது, எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவருக்கும், அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், உதவி தோட்ட முகாமையாளரும், அந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திற்கு பிரவேசித்த போது, அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
புதிய வீட்டை நிர்மாணிக்க
அதன்பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை பணி நீக்கம் செய்வதற்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீட்டை நிர்மாணிக்கவும் தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்தநிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதுடன், அதனை நிவரத்தி செய்யும் முகமாக தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, மற்றும் காணி அமைச்சு என்பன இணைந்து அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)