கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற நூதன கொள்ளை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கிளினிக்குகளுக்கு வரும் பெண்களுக்கு போதைப்பொருட்களை கொடுத்து பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்படும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருடப்பட்ட தங்க நகைகள் விற்பனை
திருடப்பட்ட சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சந்தேக நபர்களான இருவரும் வெலிகம பிரதேசத்தில் தங்கம் வாங்கும் இடத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட தங்கப் ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கிளினிக்குகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள நாற்காலி அல்லது பெஞ்சில் அமரும் முதியவர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய பெண்களை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளினிக் வரும் நோயாளர்களே இலக்கு
சந்தேகநபர்கள் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று உணவு மற்றும் பானங்களில் போதைப்பொருள் கலந்து கொடுத்து அவர்களை போதையில் ஆழ்த்தி தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
03 முறைப்பாடுகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய தம்பதிகள் கணவன்-மனைவி அல்ல, பொரளை பிரதேசத்தில் உள்ள உறைவிடப் பாடசாலையில் (boarding school) தங்கியிருந்த போதே இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் 40 மற்றும் 42 வயதுடைய அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
மருதானை காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் இஷாந்த குமாரவின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
