பெண்கள் தலைமை தாங்கும் கொள்ளைக்கும்பல் சிக்கியது!
பலபிட்டிய, அஹுங்கல்ல, கொஸ்கொட, உரகஸ்மன்ஹந்திய ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து இரவு வேளையில் சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக் கும்பலை வழிநடத்தியதாகக் கூறப்படும் பெண்களை தலைமையாக கொண்ட இரண்டு கொள்ளையர்கள் உட்பட நான்கு (04) பேரை கொஸ்கொட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 2410 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3112 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக கொஸ்கொட காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
உளவு பார்த்தல்,வீடுகள் உடைத்தல்
முதலாம் மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாகவும், மூன்றாவது சந்தேக நபர் வீடுகளை உடைப்பதற்கு தலைமை தாங்கியதாகவும் நான்காவது (04) சந்தேகநபரே வீடு உடைப்புச் சம்பவத்தை உளவு பார்த்ததுடன் ஆதரவையும் உதவிகளையும் வழங்கியது விசாரணையின் போது உறுதிப்படுத்தப்பட்டதாக கொஸ்கொட காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் இருவரும் அத்தை மற்றும் மகள் எனவும் மற்றைய இரு சந்தேக நபர்களும் சந்தேக நபர்களின் குடும்பங்களின் உறவினர்கள் எனவும் கொஸ்கொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
10 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல்
கொஸ்கொட, அஹுங்கல்ல, ஊரகஸ்மன்ஹந்திய காவல்துறை பிரிவுகளில் உள்ள 10 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளதாக கொஸ்கொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சுமார் 08 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கொட காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொள்ளையர்கள் போதையில் வீடுகளின் கதவுகளை உடைத்து வீடுகளுக்குள் நுழைந்து குடியிருப்பாளர்களை அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையின் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொள்ளையர்களின் வசம் இருந்த வாள்கள், கத்திகள், இரும்புக்கம்பிகள், வீடுகளின் கதவுகளை உடைத்து மக்களை பயமுறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |