யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவரின் அன்பளிப்பு (படங்கள்)
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டதுடன் சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும் மக்களுக்கு வழங்கி வைத்துள்ளனர்.
இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கமும் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில்
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடந்த நிகழ்வில் இன்று காலை தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகளை சீனத் தூதுவர் வழங்கி வைத்தார்.
நெடுந்தீவு மக்களுக்கு 500 உலருணவுப் பொதிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சீனத் தூதுவரால் வழங்கி வைக்கப்பட்டது.
நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையில்
நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் சிங்கள மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு 250 உலருணவுப் பொதிகளை சீனத் தூதுவர் வழங்கி வைத்தார்.
பருத்தித்துறை சக்கோட்டை பகுதிக்கும்
யாழ்ப்பாணத்தில் பழைய கச்சேரி கட்டடத் தொகுதி, இலங்கையின் முனையான பருத்தித்துறை சக்கோட்டை பகுதிக்கும் சீனத் தூதுவர் விஜயம் செய்து பார்வையிட்டார்.
இந்நிலையில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் நயினாதீவு உள்ளிட்ட தீவகப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.