கடன் அட்டை தரவுகள் மூலம் 55 இலட்சம் மோசடி - பின்னணியில் சிக்கிய நபர்
சட்டவிரோதமான முறையில் 5 இலட்சம் வெளிநாட்டு கடன் அட்டைகளின் தரவுகளை சேமித்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த 18 வயது இளைஞனை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் 90 அட்டைகளை பயன்படுத்தி 55 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக கடந்த 4ஆம் திகதி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ஒரு குறித்த தனியார் விநியோக நிறுவனத்தினால் செய்யப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (5) குருநாகல் தும்மலசூரிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழுவாக ஒன்று கூடி மோசடி
சந்தேகநபர் சமூக வலைத்தளத்தின் ஊடாக குழுவாக ஒன்று கூடி வெளிநாட்டு கடன் அட்டைகளின் தரவுகளை சட்டவிரோதமாக சேமித்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரின் கணனியை பரிசோதித்த போது அதில் 5 இலட்சம் பெறுமதியான தரவுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் தரவுகளை பயன்படுத்தி இணையம் ஊடாக பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கணனிகள், ஒளிப்பட கருவிகள், பல்வேறு உணவுப் பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்ட பல பொருட்களை இவ்வாறு கொள்வனவு செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விசாரணை
இந்த பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு பொருளை பெற்றுகொள்வதற்காக இடைப்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லக்கி ரந்தெனிய அவர்களின் மேற்பார்வையின் கீழ், உதவிப் காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ.பி. ஜயநெட்டி, இன்ஸ்பெக்டர் கயஸ்ரீ தலைமையில், சமூக வலைதள குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, அதன் புலனாய்வு அதிகாரிகளான மகேஷ் கலுகல்ல, பி ரங்க பண்டார, சாருகா பாத்தும் ஜயவர்தன. , தரிந்து திவ்யாஞ்சல மற்றும் அசோக ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.