அதிபர் அலுவலகத்தை தகர்க்க திட்டமா ...! வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு களத்தில்
வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதா
அதிபர் மாளிகை மற்றும் அதிபர் செயலகத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதா என பாதுகாப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, அந்த இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஏற்கனவே நிறுத்தப்பட்டு சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரொஷான் டயஸின் மேற்பார்வையில் கொழும்பு மத்திய காவல்துறை அதிகாரசபை இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த இரகசிய தகவல்
காலி முகத்திடல் போராளிகள் இந்த கட்டடங்களை சுவீகரித்ததன் பின்னர் அரச நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதிபர் செயலகம் மற்றும் அதிபர் அலுவலகத்தை தம்வசப்படுத்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டு வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.