தமிழர் தாயகத்தில் நிலையான தீர்வை பெற்றுத் தரவேண்டும் - தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அரசியல் துறையின் வலியுறுத்தல்
"தமிழ் மக்கள் தங்களின் தீர்வை தாங்களே தீர்மானிக்கும் இறுக்கமான வழிமுறையே எமது தீர்வாக அமைய வேண்டும்." என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் உறுதியான நிலைப்பாட்டை அறிக்கையொன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த அறிக்கையில் இலங்கையில் நீண்டகாலமாக நீடித்து வரும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாக 09.01.2023 அன்று தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அதிக உயர் தியாகத்தாலும் உன்னத அர்ப்பணிப்பினாலும் எமது மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வானது அவர்களின் முழுமையான ஒப்புதலுடன் எட்டப்பட வேண்டும் என்பது எமது உறுதியான அரசியல் நிலைப்பாடாகும்என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனப் பிரச்சனை பேச்சுவார்த்தை
மேலும் குறித்த அறிக்கையில்,
“ஈழத் தமிழ் மக்களின் இனப் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்கள ஆட்சியாளர்களுக்கும், தமிழ் மக்களால் தேர்த்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இடையே இடம்பெறுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுவதாக நாம் அறிகிறோம்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள தமிழர் தரப்புப் பிரதிநிதிகளுக்கு அரசியல் தீர்வு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினராகிய நாம் எமது வலுவான நிலைப்பாட்டைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
ஈழத் தமிழினத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பில் இன்றுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள்ள தார்மீகப் பொறுப்பைப் புரிந்துகொண்டு இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தைக் கையாள வேண்டுமென அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
பூரண சுயாட்சி
எமது விடுதலை இயக்கத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தேர்தல் அரசியலில் தமிழ் தேசியக் கட்சிகளை ஒரு பொதுக் குடையின் கீழ் ஒன்றிணைந்து போட்டியிட வைப்பதற்காகவும், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் ஏகோபித்த முடிவை இலங்கை அரசுக்கும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்துவதற்காகவும் 2001 ஒக்டோபரில் உருவாக்கப்பட்டது.
அன்றிலிருந்து 2020 இல் நடைபெற்ற கடந்த தேர்தல் வரை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாகிய வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் பிரகாரம் பூரண சுயாட்சி அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வு என்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது எமது அழுத்தமான நிலைப்பாடாகும்.
எத்தகைய வல்லாதிக்க சக்திகள் உங்களுக்கு அழுத்தம் கொடுத்தாலும், நீங்கள் தமிழ் மக்களுக்கு முன்வைத்த கொள்கை கோட்பாட்டிற்கு மக்கள் வழங்கிய ஆணையை மீறி நீங்கள் செயற்படமுடியாது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் நீங்கள் முன்வைத்த கொள்கை கோட்பாடுகளுக்குக் குறைவான தீர்வுகளுக்கு நீங்கள் செல்வதானால் அதனைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் உங்களை நம்பி வாக்களித்த எமது மக்களே.
தீர்வு பற்றிய இறுதி முடிவு
ஆகையால் எமது மக்களின் தலைவிதியை தாங்களே தீர்மானிக்க ஒரு பொது வாக்கெடுப்பைக் களத்திலும், புலத்திலும் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்போடு நடாத்தி வெகுசன அங்கீகாரம் பெற்றே நீங்கள் தீர்வு பற்றிய இறுதி முடிவெடுக்க வேண்டும் என்பது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினராகிய எமது அழுத்தமான நிலைப்பாடாகும்.
ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பல உலக நாடுகள் பின்பற்றிவரும் பொது வாக்கெடுப்பு முறையூடாகப் பெறப்படும் மக்கள் கருத்துக்கணிப்புப் பொறிமுறை ஈழத் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு விடயத்திலும் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதை உங்கள் மீது அழுத்தம் தரும் நாடுகள் மற்றும் சக்திகளிடம் தெளிவாக எடுத்துரையுங்கள். பொது வாக்கெடுப்பொன்றைத் தமிழர் தாயகத்தில் நடாத்துவதானால் அதற்கு ஏதுவாக வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி, இராணுவ அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க கூடிய இயல்பு நிலையை உருவாக்கவேண்டும்.
அவ்வாறானதோர் சூழ்நிலையை வடக்குக் கிழக்கில் உருவாக்கக் கோருவதோடு அரசியல் தீர்வுக்கான நல்லெண்ண சமிக்கையாக பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம், தமிழ் அரசியல் கைதிகளின் முழுமையான விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, சிங்களப் பேரினவாத அரசால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட தமிழர் நிலங்களின் விடுவிப்பு போன்ற அடிப்படை நிபந்தனைகளை சர்வதேசத்தின் மேற்பார்வையில் குறித்த காலக்கெடுவுக்குள் சிறிலங்கா அரசை நிறைவேற்றக் கோருங்கள்.
தமிழின அழிப்புக்கான பொருளாதாரம்
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்களின் இனவாத ஒடுக்குமுறை உச்சம்பெற்று, தமிழின அழிப்புக்காக செலவிட்ட அதீத பொருளாதார விரயம் தான் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என்பதைச் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்தி, இந்த இனப் பிரச்சனைக்கு நிலையான தீர்வு எட்டப்பட்டாலேயன்றி, ஒரு போதும் சிறிலங்கா அரசாங்கம் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நிரந்தரமாக மீள முடியாது என்பதை உணரவையுங்கள்.
இந்த உண்மையைச் சிங்கள மக்களுக்கும் புரியவைத்து, இனவாத அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளையும் இனக் குரோதக் கருத்துக்களை விதைக்கும் அரசியல்வாதிகளையும் சிங்கள மக்கள் புறக்கணிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மொத்தத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலான தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாண முழு மனதுடன் சிங்கள மக்களும் ஒத்துழைக்கும் மனமாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
சிங்கள மக்கள் தமது தாயகத்தில் எப்படி வாழ்கிறார்களோ, அதேபோல் தமிழ் மக்களும் தமது தாயகத்தில் சுயாட்சி அதிகாரம் உடைய ஆட்சியை நிறுவி, தம்மைத்தாமே ஆளுவதற்கு சிங்கள மக்கள் தடையாக இருக்கக்கூடாதென்பதை அவர்களுக்குத் தெளிவாக உணர்த்துங்கள்.
சாணக்கியம், இராஜதந்திரம் என்ற போர்வை
தமிழர்களுடன் சமாதானமாகச் சகவாழ்வு வாழ்வதா அன்றி தமிழர்களைப் பிரிந்து செல்ல நிர்ப்பந்திப்பதா என்பது சிங்கள தேசத்தின் அரசியல் அணுகுமுறையில் தான் தங்கியுள்ளதென்பதை தெளிவாகச் சிங்கள ஆட்சியாளர்களுக்கும், சிங்கள மக்களுக்கும் புரியவையுங்கள். கடந்த கால ஆயுதப் போராட்டத்தில் நாங்கள் பின்னடைவுகளை அழிவுகளைச் சந்தித்திருக்கலாம்.
ஆனால் இன்று தமிழர்களாகிய நாம் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வலுவான பொருளாதார அரசியல் சக்தியாக மீள் எழுச்சி கொண்டு வருகின்றோம். அரசியல் வழிமுறையில் போராடும் எமது மக்களின் விடுதலை எமக்குச் சாதகமானதோர் பூகோள அரசியல் மாற்றம் ஏற்படும் போது நிச்சயமாகச் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது நம்பிக்கையாகும்.
Tigers Of அசைக்கமுடியாத எமது மீளமுடியாப் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடந்த காலங்களைவிட உதவி வழங்கும் நாடுகளும், சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும், ஐக்கிய நாடுகள் சபையும் கொடுத்திருக்கின்ற அழுத்தத்திலிருந்து சிங்கள ஆட்சியாளர்களைக் காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நடாத்தும் பேச்சு வார்த்தை நாடகத்தின் உள்நோக்கம் புரியாமல், சாணக்கியம், இராஜதந்திரம் என்ற போர்வையில் அவருக்கு முண்டுகொடுத்து, மீண்டும் ஒருதடவை நீங்கள், உங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை ஏமாற்றி, மீளமுடியாப் புதைகுழிக்குள் தள்ளிவிடுவதை எம்மால் அனுமதிக்க முடியாது.
தாய்லாந்துப் பேச்சு வார்த்தை
உலக நாடுகளின் நெருக்கடி ஊடாக ஈழத் தமிழர்கள் இனப் பிரச்சனைக்கான நியாயமான தீர்வுகளைப் பெறக்கூடிய வாய்ப்பு இன்று எமது கைக்கு எட்டியுள்ளது. இந்த வாய்ப்பை தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான மூலாதாரமாகப் பயன்படுத்தத் தவற வேண்டாமென அனைத்துத் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளையும் உரிமையோடு வேண்டி நிற்கிறோம்.
எமது விடுதலை இயக்கத்தோடு இறுதியாக நடாத்தப்பட்ட தாய்லாந்துப் பேச்சு வார்த்தைகளின் போது முன்வைத்த உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு என்பது தமிழ் மக்களின் பூரண சுயாட்சி உரிமையை வலியுறுத்துகிறது. தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த வடக்குக் கிழக்குப் பாரம்பரிய மண்ணில் அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவே விரும்புகிறார்கள்.
எமது மொழியை வளர்த்து, எமது பண்பாட்டைப் பேணி, எமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, எமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழும் வாழ்வையே எமது மக்கள் இன்றும் விரும்புகிறார்கள்.
பூரண சுயாட்சி அதிகாரத்துடன்
எமது தாய மண்ணில் எம்மை நாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்பும், எமது மக்களின் அரசியல் விருப்புக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினராகிய நாம் என்றும் உறுதுணையாக நிற்போம். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் தீர்வு விடயத்தில் எமது மக்களுக்கான தீர்வாக, வடக்குக் கிழக்கு இணைந்த எமது தாயக மண்ணில் எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், அத்திட்டத்தை நாம் சாதகமாகப் பரிசீலிப்போம்.
அதை விடுத்து மக்களிடம் பெற்ற ஆணையை மறுதலித்து, அடிப்படை உரிமைகளையே மறுதலிக்கும் அரைகுறைத் தீர்வுகளை, தமிழ் மக்களின் அனுமதியின்றிப் பெறும் முயற்சிகளில் யார் ஈடுபட்டாலும் அத்தகைய கட்சிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசியலை விட்டு அப்புறப்படுத்த தாயகத்தில் உள்ள போராளிகள், சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் அணிதிரட்டி, வலுவான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதைத் தெளிவாக அறியத் தருகின்றோம்.
நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மாவீரர்கள்
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களையும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களையும் விதையாக்கிக் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான மூலாதாரக் கோட்பாடுகளை, உங்களால் அற்பணிப்புடன் உறுதியாகப் பாதுகாக்க முடியாவிட்டால், எமது மக்களுக்காக அரசியல் செய்வதைக் கைவிட்டு நீங்களாகவே அரசியல் அரங்கைவிட்டு விலகிச் செல்லுங்கள்.
அற்பணிப்போடு அரசியல் செய்யக்கூடியவர்கள் எமது ஈழத் தமிழ் இனத்தைச் சரியான இலக்கு நோக்கி நகர்த்திச் செல்வார்கள். ஐக்கிய நாடுகள் அவையின் சாசனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை கருப் பொருளாகக் கொண்டே எமது விடுதலைப் போராட்ட இலட்சியம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அன்றைய ஆயுதப் போராட்ட காலத்திலும் இன்றைய அரசியல் போராட்ட காலத்திலும், சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்ட இலட்சியத்தில் நாம் உறுதியாகவே உள்ளோம்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு
தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுயநிர்ணய உரிமை ஆகியனவையே எமது அரசியல் இலட்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாகும்.
எமது அமைப்பு திம்புவில் இருந்து தாய்லாந்து வரை வலியுறுத்திய இந்த அடிப்படைக் கோட்பாடுகளையே நாம் இன்றும் வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த மூலக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே எமது தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினராகிய எமது உறுதியான நிலைப்பாடாகும். ”என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
