திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
இயற்கையின் உன்னத படைப்புக்களின் ஒன்றாக மனிதன் இருக்கிறான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
மனிதர்களில் ஆண் பெண் ஆகிய இரு பாலினங்களைத் தாண்டி திருநர்கள் (Transgender) எனப்படுபவர்கள் பிறப்பின் போதான அவர்களின் பாலின அடையாளத்துக்கும், அவர்களின் மனப்பூர்வமான பாலின அடையாளத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
திருநர்கள் பற்றித் தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பாலின அடையாளங்களின் பதிவுகள் காணப்படுகின்றன.
வரலாற்று பதிவுகள்
இது தவிர தொல்காப்பியம், நன்னூல், சங்க இலக்கியம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், தற்கால இலக்கியம் போன்ற அனைத்திலும் அவர்களைப் பற்றிய பதிவுகளைக் காண முடிகிறது. எனவே வரலாறு நெடுகிலும் அவர்கள் பதிவு செய்யப்படுமளவு சமூகத்தின் அவதானத்தைப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர்.
இலங்கையில் திருநங்கைகள் கடுமையான சமூக, பொருளாதார, மற்றும் சட்ட சவால்களை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் குடும்பத்தினரால் நிராகரிக்கப்படுகிறார்கள்; சிலர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பாகுபாடு, அடையாள ஆவணங்களில் பாலின மாற்றத்தைச் செய்யும் சிரமம், மற்றும் சுகாதார சேவைகளில் உள்ள தடைகள் இவர்களின் நாளாந்த வாழ்வை பாதிக்கின்றன.
திருநர்களைப் பற்றிய சரியான தெளிவின்மையால் அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான மக்கள் அவர்கள் பிழையானவர்களென்றும் வெவ்வேறு பட்ட மன நிலைகளில் அணுகுபவர்களாக இருக்கிறார்களே தவிர அவர்களது உடல், உளம் சார்ந்த காரணிகளை அறிய ஆர்வமற்றவர்களாகவும் அசட்டை செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.
சமூக நிராகரிப்பு
முக்கியமாக பாடசாலைக் காலங்களில் அவர்கள் தம்மை யார் என்று அறிந்து கொள்ளத் தொடங்கும் அந்தக் கால காட்டத்தில் யாரிடமும் பேசவோ கலந்தாலோசிக்கவோ முடியாத நிலை இருப்பது பற்றி அவதானிக்கப்பட வேண்டும். பல குழந்தைகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
அவர்களது நிலை தொடர்பாக ஆசிரியர்கள் எதுவும் அறியாதவர்களாக இருப்பதை பல உண்மைச் சம்பவங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
இலங்கைச் சட்டங்களில் பாலின அடையாள உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை. சில சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள், சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் சமூக இவர்களின் அங்கீகாரத்திற்காக போராடி வருகின்றனர்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பாகுபாடு, குடும்ப மற்றும் சமூக நிராகரிப்பு, வன்முறை மற்றும் தொல்லைகள், சுகாதார சேவைகளின் கிடைப்பனவின்மை போன்ற பல்வேறு பட்ட பாதிப்புக்களை எதிர் கொண்டாலும் எதிர் நீச்சலடித்து அவர்கள் முன்னேறி வருகின்றனர்.
கல்வியிலும் உயர் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதிலும் அவர்கள் முனைப்போடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உள ரீதியான பாதிப்பு
இந்தியாவைப் போல இலங்கையிலும் திருநங்கைகளின் உரிமைகள் குறித்து விவாதங்கள் வலுப்பெற்று வருகின்றன. சமீப காலங்களில் சிலர் அரசியல், கலை, மற்றும் சமூக ஊடகங்களில் தங்கள் குரலை வலுப்படுத்தியுள்ளனர்.
பல துறைகளில் சாதித்தவர்களாக திகழ்கிறார்கள் எனவே சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஊடகங்களில் நேர்மையான பிரதிநிதித்துவம், மற்றும் கல்வி மூலம் பொது மக்களின் பார்வையை மாற்றுவது போன்றவற்றை அவர்களே பல நிறுவங்களின் உதவியுடனும் தனிப்பட்ட முறையிலும் உரிமைக் குரல் எழுப்பி வருவதை அவதானிக்க முடிகிறது.
திருநர்களின் பாலின அடையாளத்தின் அடிப்படையில் அல்லாமல் அவர்களின் திறமைகள், கனவுகள் மற்றும் மன உறுதியின் அடிப்படையில் அவ் அவர்கள் மதிக்கப்பட வேண்டும்.
கல்வி, வேலை வாய்ப்புகள், பாதுகாப்பான வாழ்விடம், மற்றும் சட்ட அங்கீகாரம் ஆகியவை வழங்கப்படவும் மனிதாபிமான முறையில் நடத்தப்படவும் வேண்டும். முக்கியமாக உள ரீதியாக அவர்களைப் பாதிப்புக்குள்ளாக்குதல் என்பது சர்வசாதாரணமாக சமூக வலைத்தளங்களில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.
இவை அத்தனையும் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான வேலைத்திட்டங்களையும் விழிப்புணர்வினையும் சட்டதிட்டங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

