முடங்கப்போகும் பேக்கரி தொழில் - அரசிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
பேக்கரி தொழிலை தொடர முடியாத நிலைமை
அரசாங்கம் தலையிட்டு மாவு, முட்டை மற்றும் மாஜரின் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தி குறைத்தால், பாண் மற்றும் பணிஸின் விலையை ரூ. 50 மற்றும் ரூ.25 ஆல் குறைக்க முடியுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.
இப்படியான நிலைமையில் தமது தொழிலை தொடர முடியாத நிலைமைக்கு வந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.
"இப்போது ஒரு முட்டையின் விலை ரூ.65க்கு விற்கப்படுகிறது. "ஒரு மூடை மாவு ஒவ்வொரு நாளும் சீராக ஏறிக்கொண்டிருக்கிறது.மாஜரின் சந்தை விலை நிச்சயமாக எங்களால் எட்ட முடியாததாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
மாபியா ஆதிக்கம்
தென்னிந்தியாவில் முட்டை ஒன்றின் விலை ரூ. 18. அரசு அவற்றை இறக்குமதி செய்து ரூ. 30 ற்கு விற்க முடிந்தால் , நாங்கள் பாண் மற்றும் பணிஸின் விலைகளை குறைக்க முடியும், என்று அவர் தெரிவித்தார்.
முட்டை தொழிலில் மாபியா ஆதிக்கம் செலுத்துகிறது; இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யக் கூடாது என்று எங்களை மிரட்டினர், என்றார்.
கோதுமை மாவின் விலையில் கட்டுப்பாடு இல்லை
"சந்தையில் கோதுமை மாவின் விலையில் கட்டுப்பாடு இல்லை. சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி டீலர்கள் மற்றும் முகவர்கள் தங்கள் விருப்பப்படி விலையை உயர்த்துகிறார்கள்," என்று அவர் கூறினார்.
எனவே, பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க தேவையான ஆனால் கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.