நாளை நம் தலைமுறைகளுக்கு சொல்லவேண்டிய கதை!புராணங்கள் தோற்ற புனிதர்களின் வரலாறு
ஒரு தேசத்தின் வரலாறு எப்போதும் வெற்று ஏடுகளில் எழுதப்படுவதில்லை அது தன் பிள்ளைகளின் தியாகங்களாலும், அர்ப்பணிப்புகளாலும் செதுக்கப்படுகிறது.
உலக வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தியாகங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், தன் மண்ணின் விடுதலைக்காக, தன் மக்களின் விடியலுக்காகத் தன் உயிரையே கொடையாகக் கொடுத்த தியாகத்தின் புதல்வர்கள் வாழ்ந்த காலம் நம் காலம்தான்.
ஈழவர் வரலாற்று நாட்குறிப்பில் யூலை 5 இது என்றென்றைக்கும் ஆறாத காயமொன்றின் ஆற்றிவிடமுடியாத மனிதர்களின் பிரிவின் நாளாகவும் அதேநேரம் அழியாத பெருமிதமாகவும் வாழும் ஒரு புனிதமான நாளாகும்.
தன் இனத்தின் துயர் துடைக்க, தங்களின் இளமையையும், இன்பமான வாழ்வையும் துறந்து, தேசத்தின் பலிபீடத்தில் தங்களை ஆகுதியாக்கிக் கொண்ட தற்கொடையாளர்களை தமது நெஞ்சங்களில் நிறுத்தி கனதியான வலிகளோடும் அடங்காத கர்வத்தோடும் வணங்கும் நாள்.
இதேபோன்ற யூலை ஐந்தாம் திகதி அது 1987 ஆம் ஆண்டு நெல்லியடி மண்ணில் ஈழதேசத்தின் முதல் தற்கொடைப் பதிவு நிகழ்ந்தபோது, அது ஒரு புதிய வரலாற்றின் தொடக்கமாக அமைந்தது.அவர்கள் அசாத்தியங்களை சாத்தியமாக்க தொடங்கினார்கள்.
ஆனால் அவர்கள் மரணத்தை நேசித்தவர்கள் அல்ல தங்கள் மக்களின் வாழ்வை நேசித்தவர்கள். தங்களின் இறுதிப் பயணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர்கள் முகத்தில் எவ்வித பதற்றமும் இன்றி, புன்னகையோடு விடைபெற்றுச் சென்ற அந்தப் புகைப்படங்களை இன்று பார்க்கும்போதும் நம் நெஞ்சம் படபடக்கின்றது, மயிர் கூச்செறிகின்றது மரணத்தின் வாசலில் நின்றுகொண்டு, எப்படி ஒரு மனிதனால் அப்படிப் புன்னகைக்க முடியும்?
நாம் வாழும் இந்த உலகில் ஒரு மனிதனுக்குத் தன் உயிரை விட மேலானது எதுவும் இருக்க முடியாது. ஆனால், அந்த உயிரையும் தூக்கியெறிந்துவிட்டு, தங்களை உருக்கித் தேசத்திற்கு ஒளியூட்டினார்கள் இந்த கந்தக காற்றில் கரைந்த தேசப்புதல்வர்கள் .
நாம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் மட்டுமே படித்து வியந்த தன்னலமற்ற தியாகம் என்ற சொல்லுக்கு, நம் கண்முன்னே வாழ்ந்த நடமாடும் சாட்சிகளாகத் திகழ்ந்தவர்கள் அவர்கள்.
அவர்கள் வாழ்ந்த அதே மண்ணில், அவர்கள் சுவாசித்த அதே காற்றைச் சுவாசித்து, அவர்கள் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நம் தலைமுறைக்குக் கிடைத்த ஆகப்பெரும் பேறும் பெருமிதமும் ஆகும்.
நாளை நம் சந்ததியினருக்குக் கதை சொல்லும்போது, "தன் இனத்தின் விடியலுக்காகத் தங்களையே தியாகம் செய்த அற்புத மனிதர்களோடு நாங்களும் வாழ்ந்தோம்" என்று நெஞ்சுயர்த்திப் பெருமையோடு கூறுவோம். அந்தப் பெருமிதம் நம் குருதியில் எப்போதும் கலந்திருக்கும்.
உண்மையில் அவர்கள் தங்களின் இன்றையும் நாளையையும் , எதிர்காலத்தையும் நமக்காக அர்ப்பணித்தது, நாம் வெறும் கண்ணீர் சிந்திவிட்டு கடந்து போவதற்காக அல்ல. அவர்களின் உன்னத தியாகத்திற்கு ஈழத்தமிழர்களாகிய நாம் செலுத்த வேண்டிய நன்றிக்கடன் என்பது, அவர்கள் காட்டிய அந்தத் தூய்மையான அர்ப்பணிப்பின் விழுமியங்களை நெஞ்சில் ஏந்துவதே ஆகும்.
காலங்கள் மாறினாலும், அரசியல் சூழல்கள் உருண்டோடினாலும், அந்தத் தியாகத்தின் புதல்வர்களின் பெயர்களையும், அவர்களின் வரலாற்றையும் நம் பிள்ளைகளின் நெஞ்சில் அழியாத காவியமாகப் பதிக்க வேண்டும்.
அதுபோல அவர்கள் எந்த விடியலை நோக்கிய கனவோடு தங்களை ஈந்தார்களோ, அந்தத் தமிழ்த்தேசிய உரிமைக்கான தார்மீகப் பயணத்தை நாம் என்றும் கைவிடாமல், அறவழியில் முன்னோக்கி நகர்த்த வேண்டும்.
உண்மையில் தேசத்தின் பெருவெளியில் கரைந்துபோன அந்தத் தியாகப் பறவைகள் மறைந்துவிடவில்லை. அவர்கள் நம் மண்ணின் காற்றில் கலந்திருக்கிறார்கள் நம் கடலின் அலைகளில் சுழன்றடிக்கிறார்கள் நம் விடியலின் கதிர்களில் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |