தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய திடீர் நடவடிக்கை
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினமாக அக்டோபர் மாதம் 10ம் திகதியை இந்தியப்படை அதிகாரிகள் தேர்ந்தெடுத்தார்கள்.
விடுதலைப் புலிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திடீர் தாக்குதல்களை நடத்துவதுடன், விடுதலைப் புலிகளின் தலைவரை கைது செய்வதும் இந்தியப் படையினர் வகுத்திருந்த திட்டங்களில் பிரதானமாக இருந்தது.
திடீர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கைதுசெய்து விட்டால், அனைத்துச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டுவிடும் என்றே இந்தியப் படையினர் நினைத்தார்கள்.
அந்த அடிப்படையில் அவர்கள் தமது திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்கள். அதேவேளை, புலிகளுக்கு எதிராக அவர்கள் மேற்கொள்ள இருந்த இந்த இராணுவ நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு மற்றொரு பயமும் இருந்தது. அதாவது தமிழ் நாட்டில் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்வலைகள் எழும்பிவிட்டால் என்ன செய்வது என்பதே அந்தப் பயம்.
பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆரிற்கும் இடையிலான நட்பு
பிரபாகரனுக்கும், தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரிற்கும் இடையிலான நட்பு பற்றியும் இந்தியப்படை அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தார்கள். எனவே தமிழ் நாட்டை, குறிப்பாக தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை தனதாகக் கொண்டிருந்த அ.தி.மு.கா.வை கைக்குள் போட்டுக்கொண்டால் இந்தியப் படைகளின் இராணுவ நடவடிக்கை தொடர்பாக தமிழ் நாட்டில் எழக்கூடியதான சிக்கல்களை ஓரளவு சமாளித்துவிடலாம் என்று நினைத்தார்கள்.
ஏற்கனவே இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் பாரிய ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழ் நாட்டு மக்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியை இந்திய அரசு ஆரம்பித்திருந்தது.
ஜுலை மாதக் கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பான விளக்கத்தை இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி நேரடியாகவே வழங்கியிருந்தார்.
மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரையும் அழைத்து வருவதில் ராஜிவ் காந்தி வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தோன்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ( அப்பொழுது பிரபாகரன் இந்திய அரசின் அழைப்பின் பெயரில் புதுடில்லி அழைத்துவரப்பட்டு அஷோக்கா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.) ஆனால் அந்தக் கூட்டத்திற்கு பிரபாகரன் சமுகமளிக்கவில்லை.
பாரதியாரின் ‘சிங்களத் தீவிற்கு ஓர் பாலம் அமைப்போம் என்ற பாடல் வரிகள் திரும்பத்திரும்ப ஒலிக்க, மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
சென்னையில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களும் ஆயிரக் கணக்கில் கலந்துகொண்டார்கள். ஈழத்தில் இந்தியா மேற்கொள்ள இருந்த நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டு மக்களின்; ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இந்தியாவின் நடுவன் அரசு ஈடுபட ஆரம்பித்திருந்த முதலாவது சம்பவம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
அதனைத் தொடர்ந்து பல பத்திரிகையாளர் மாநாடுகள், பிரச்சாரங்கள் என்று இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு சார்பாக தமிழ் நாடு மக்களை திருப்பும் பலவித முயற்சிகளில் இந்திய அரசு தன்னை ஈடுபடுத்தி வந்தது.
ஆனாலும், புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை தமிழ் நாடு மக்கள் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளுவார்கள் என்ற சந்தேகம் இந்தியாவின் மத்திய அரசாங்க அதிகாரிகளிடம் காணப்படவே செய்தது.
புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தம்
எனவே தமிழ் நாட்டில் இருந்து எழக்கூடியதான பிரச்சினைகளைச் சமாளிக்கும் நகர்வுகளை அவர்கள் ஒவ்வொன்றாக மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். முதலில் இந்தியப் படையின் ஒரு பிரிவினர் சென்னையின் டிபென்ஸ் காலனியில் பகிரங்கமாக முகாம் அமைத்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
சென்னையின் பறங்கிமலைப் பகுதிகளிலும், பட் றோட், ஆலந்தூர், மீனம்பாக்கம், கிண்டி, தாம்பரம் போன்ற பிரதேசங்களில் இந்தியப் படையினர் ஆயுதங்களுடன் வாகனங்களில் நடமாடவும், ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபடவும் ஆரம்பித்தார்கள். நிச்சயமாக இந்த நடவடிக்கைகள் தமிழ் நாட்டு மக்களை பயமுறுத்த மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே அமைந்திருந்தது.
ஏனெனில், இந்தியப் படையினர் பயிற்சி நடவடிக்கைளில் ஈடுபட ஏராளமான இடங்கள் அவர்களுக்கு இருந்தன. பாரிய முகாம்களும், காட்டுப் பிரதேசங்களும், வளாகங்களும் இந்தியப் படையினர் பயிற்சிகளை மேற்கொள்ளும் முகமாக இருந்தன.
அப்படி இருக்கையில் பொதுமக்கள் குடியிருப்புகளின் மத்தியல் இந்தியப்படை முகாம் அமைத்து நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்ததானது, தமிழ் நாட்டுத் தமிழ் மக்களை அச்சுறுத்தும் உள்நோக்த்தைக் கொண்டதாகவே இருந்தது.
இந்தியப் படையினர் எதிர்பார்த்தது போலவே இந்தியப் படையினரைப் பார்ப்பதற்கென்று பெரும் திரளான மக்கள் திரண்டார்கள். ஆயுதங்களுடன் கூடிய இந்தியப்படையினரைக் கண்ட தமிழ் நாட்டு மக்கள் மிகுந்த வியப்படைந்தார்கள்.
சாதரணமாகவே வெறும் ‘லத்தி கம்புகளுடன் நடமாடும் காவல்துறையினரை பார்த்தே அச்சப்பட்ட தமிழ் நாட்டு ஜனங்களுக்கு ஆயுதங்களுடன் கூடிய இந்தியப் படையினர் அதிக அச்சத்தையும், பிரமிப்பபையும் ஏற்படுத்துபவர்களாகவே தோன்றினார்கள்.
அதுவும் இந்தியப் படையினர் கைகளில் காணப்பட்ட எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளின் தோற்றம் அவர்களுக்கு அதிக பிரமிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்தது. அதிக துவாரங்களுடன் காணப்பட்டது எஸ்.எம்.ஜி. ஆருக்குஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.
“இந்தத் துப்பாக்கியில் காணப்படும் ஒவ்வாரு துவாரங்களினூடாகவும் பல சன்னங்கள் ஒரே தடவையில் பறப்பட்டுச் சென்று எதிரிகளைத் தாக்கும் என்று எஸ்.எம்.ஜி. ஆர் பற்றி பொதுமக்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். பறங்கிமலை டிபென்ஸ் காலனி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தியப்படை முகாமில் இரண்டு யுத்த தாங்கிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
பொது மக்களின் ஆச்சரிய விழிகளை இந்தக் காட்சிகள் மேலும் அகல விரியவைத்தன. தமிழ் நாட்டு மக்களை ஆச்சரியப்படுத்தி, அச்சமடைய வைக்கும் இந்தியப்படைகளின் திட்டம் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தன.
அத்தோடு, சாதாரணமாகவே நாட்டுப் பற்று அதிகம் கொண்ட தமிழ் நாட்டு மக்களுக்கு, தங்களது படைகளின் பிரசன்னத்தால் ஏற்பட்ட பிரமிப்பானது, அவர்களது நாட்டுப்பற்றை இன்னும் அதிகரிக்கச் செய்தன.
தாம் ஒரு இந்தியன் என்பதில் மிகவும் பெருமைப்பட்டார்கள். மீனம்பாக்கம் விமானப்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்திருந்த மிராஜ் 2000 சண்டை விமானத்தின் சத்தங்களும், சாகசங்களும், இந்தியப் படை அதிகாரிகளின் நோக்கங்கள் அனைத்தையும் இலகுவாக நிறைவேற்றியிருந்தன.
அடுத்ததாக, இந்தியப்படை அதிகாரிகள் தமது அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்தார்கள். தமிழ் நாடு அரசைப் பணியவைக்கும் நகர்வே அது. உடல் நலக் குறைவு காரணமாக தமிழ் நாடு முதல்வர் எம்.ஜி.ஆர்.சிகிட்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தது அவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்திருந்தது.
இந்தியப் படை அதிகாரிகளின் நோக்கங்கள்
அப்பொழுது பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழ் நாட்டு அமைச்சரவைப் பொறுப்புக்களை தற்காலிகமாக கவனித்து வந்தார். பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழ் நாட்டு அமைச்சரவையில் மிகவும் பிரபல்யமான ஒருவர். எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். அத்தோடு அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையிலான தொடர்புகள் அனைத்திலும் பண்ருட்டியாரின் பிரசன்னமும் காணப்படவே செய்தது.
எனவே பண்ருட்டி ராமச்சந்திரனை மடக்கிவிட்டால், தமிழ் நாட்டு அமைச்சரவையை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பதே இந்திய அதிகாரிகளின் திட்டமாக இருந்தது.
அக்டோபர் 7ம் திகதி இரவு சென்னை பயணமான திபீந்தர் சிங் பண்ருட்டி ராமச்சந்திரனைத் தனியாகச் சந்தித்து உரையாடினார். விடுதலைப் புலிகளுக்கு தனக்கும் இடையிலான நல்ல நட்பு பற்றி விபரித்த திபீந்தர் சிங், இந்திய தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு புலிகளுக்கு எதிரான ஒரு சிறு மிரட்டலை மேற்கொண்டேயாகவேண்டி கட்டாயத்திற்கு தாம் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
புலிகள் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும், இது இந்தியாவிற்கு பாதகமாக மாறி வருவதாகவும் தெரிவித்த திபீந்தர் சிங், புலிகளை மிரட்டி இந்தியாவின் வழிக்குள் கொண்டு வரும் நோக்குடன், புலிகளுக்கு எதிராக ஒரு சிறு நடவடிக்கையை எடுப்பதற்கு தாம் யோசித்து வருவதாக நாசுக்காகத் தெரிவித்தார்.
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை புலிகளை நிராயுதப்படுத்த மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும், இது ஓரிரு நாட்கள் மட்டுமே தொடர இருப்பதாகவும், பண்ருட்டி ராமச்சந்திரனிடம் தெரிவித்தார்.
இலங்கையில் சிங்களவர்களைக் கொலைசெய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் மீளவும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதால், புலிகளைத் தடுக்காத பட்சத்தில் இந்தியப்படை இலங்கையில் இருந்து வெளியேறியேயாகவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தெரிவித்த திபீந்தர் சிங், இது இந்திய நாட்டிற்கு சர்வதேச மட்டத்தில் பாரிய தலை குனிவை ஏற்படுத்திவிடும் என்றும் குறிப்பிட்டார்.
பண்ருட்டி ராமச்சந்திரனின் மனம் படிப்படியாக மாறியது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பண்ருட்டி இராமச்சந்திரன் புதுடில்லி புறப்பட்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் சந்தித்தார்.
ராஜீவும் தம் பங்கிற்கு புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசியதுடன், தமிழ் நாட்டுத் தலைவர்கள் தேச நலனுடன் செயற்படுவார்கள் என்று தாம் எதிர்பார்பதாகவும் கூறிவைத்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியப்படைகளின் நடவடிக்கைளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துவிட்டு, பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழ் நாடு திரும்பினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டில் ஏற்டக்கூடியதான தடைகளை நீக்கிவிட்ட திருப்தியில் இந்தியப்படை அதிகாரிகள் தமது அடுத்த கட்ட திட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்தார்கள். இந்தியாவின் வரலாற்றில் அந்த நாடு மிகவும் வெட்கி தலை குணியவேண்டிய ஒரு செயலை இந்தியப்படை அடுத்ததாக மேற்கொண்டது. புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பிக்கு முன்னதாக, இந்தியப்படை மிகவும் கேவலமான நடவடிக்கை ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.
இந்தியா தன்னை ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் தகைமையை இழக்கும்படியான அந்த நடவடிக்கைக்கு நேருவழிப் பேரன் ராஜீவ் காந்தி அனுமதி அளித்ததுதான் மிகப் பெரிய கொடுமை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |