பேராபத்து ஏற்படப்போகின்றது -எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய அபாய நிலை
எதிர்காலத்தில் எரிபொருள் வருகையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய அபாய நிலை ஏற்படவுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
"இன்று இரவு டீசல் கப்பல் வரும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் டீசல் விநியோகம் தொடங்கும்." “ஆனால் கூப்பன்களை விநியோகிக்க இராணுவம் இல்லை.இராணுவமே கூப்பன்களை வழங்கியது.இப்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவம் அகற்றப்பட்டுள்ளது.
இராணுவம் வேண்டும்
ஆனால் இராணுவம் வந்து அதனை செய்யவேண்டும்.இல்லையெனில் எரிபொருள் விநியோகத்தின் போது பெரும் அழிவு ஏற்படும்.
"மேற்கு மாகாணத்தில் 320 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. 180 தாங்கிகள் எரிபொருள் மட்டுமே கிடைக்கும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் கிடைக்காது."
இதேவேளை 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிச் செல்லும் கப்பல் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும், அதன் டீசல் இன்று (15) இரவு இறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் கப்பல்கள்
தலா 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்களும், 35,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பலும் வருகின்றன. இம்மாதம் 21ஆம் திகதி 31,500 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதுடன், 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிய கப்பலும் இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் இன்னும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
