சிறிலங்கா அதிபர் ரணிலுக்கு வழங்கப்பட்ட விருது (படங்கள்)
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'அபிநந்தன' விருது விழா கடந்த 12 ஆம் திகதி கொழும்பு, சினமன் கிராண்ட் விடுதியில் நடைபெற்றது.
50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அதிபர் ரணிலுக்கு 'அபிநந்தன' விருது வழங்கினார்.
கொழும்பு சினமன் கிராண்ட் விடுதியில் ஆரம்பமான 'இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய வருடாந்த மாநாடு – 2023' இற்கு இணைந்த வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
26 சட்டத்தரணிகளுக்கு விருதுகள்
ஜூலியானா மார்கரெட் கொஸ்வத்த, வோல்டர் லெஸ்லி டி சில்வா, இரத்னசபாபதி ஆறுமுகம் ஜெகதீசன், அதிபர் சட்டத்தரணி உபாலி ஏ. குணரத்ன. கனகரத்னம் கணேஸயோகன், அதிபர் சட்டத்தரணி எம்.எம். சுஹைர், நீதியரசர் அசோக நிஹால் டி சில்வா, நீதியரசர் டி.ஜே.த.எஸ். பாலபடபெந்தி, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன உட்பட 26 சட்டத்தரணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், 'அபிநந்தன' குழுவின் தலைவர் ஜனப்ரித் பெர்னாண்டோ, இணைப்பாளர் சமத் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதம அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.