நுவரெலியாவில் விபத்து : பிறந்த நாளில் பறிபோன இளைஞனின் உயிர்
இராகலை - நுவரெலியா பிரதான வீதியில் வேகமாக சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியின் ஹாவா - எலிய காட்டுச் சந்தியில் நேற்று (21) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது வீட்டிலிருந்து நுவரெலியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் காட்டுச் சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் நுழைந்தபோது, இராகலையிலிருந்து நுவரெலியா நோக்கி வேகமாகச் சென்ற லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விசாரணை
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியான இளைஞர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (22) காலை உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் நுவரெலியாவின் ஹாவா எலியா பகுதியைச் சேர்ந்த மானெத் அபூர்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 21ஆவது பிறந்தநாள் இன்றைய தினம் (22) என விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
