கோர விபத்து..! இராணுவ சிப்பாய் உட்பட இருவர் மரணம்
ஹொரவ்பொத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (30) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஹொரோவ்பொத்தானை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த மகிழுந்து ஒன்று ஹொரவ்பொத்தானை – வவுனியா ஏ29 வீதியில் இரண்டு மாடுகளையும் அதன் பின்னர் சுவர் ஒன்றிலும் மோதியுள்ளதாக ஹொரவ்பொத்தானை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இராணுவ சிப்பாய்
இந்த விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் படுகாயமடைந்து ஹொரோவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மேலும் 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக ஹொரோவ்பொத்தானை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் முனசிங்கவைச் சேர்ந்த ரொமிந்த நளின் மதுபாஷன மற்றும் மருதங்கடவல, அளுத்வத்த இராணுவ சிப்பாயான 19 வயதான ஆர்.ஆர். சதாரு பிரபாஷன என்ற இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் ஹொரோவ்பொத்தானை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று (01) உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.