புத்தளம் வீதியில் வானுடன் மோதிய மகிழுந்து - 8 பேர் படுகாயம் (படம்)
குருநாகல் - புத்தளம் வீதியில் வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றதாக வாரியபொல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குருநாகலில் இருந்து சென்ற வான் ஒன்றும் பாதெனிய பகுதியில் இருந்து சென்ற மகிழுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் வானில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பேரும் மகிழுந்தில் பயணித்த தம்பதிகளுமாக 8 பேர் வாரியபொல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து அவர்கள் 8 பேரும் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வானில் பயணித்தவர்கள் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மகிழுந்தில் பயணித்தவர்கள் மஹவ பகுதியைச் சேர்ந்த தம்பதியர் எனவும் தெரிவித்துள்ள வாரியபொல போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.