குழந்தைகளுக்கான தடுப்பூசி வயதெல்லை எதிர்காலத்தில் மாறக்கூடும் - பி.ஜே.சி பெரேரா
கொரோனா வைரசுக்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் வயதை எதிர்காலத்தில் மாற்றியமைக்க முடியும் என்று குழந்தை நல வைத்தியர் பி.ஜே.சி பெரேரா (P.J.C Perera) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வைத்தியர் பெரேரா, சிறிய வயதுப் பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகள் மற்றும் காரணங்கள் இதுவரை இல்லை என கூறியுள்ளார்.
எனினும் உலகிலுள்ள ஏனைய நாடுகளில் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடையே பரீட்சாத்தமாக தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும், ஒரு மாதத்திற்குள் அது தொடர்பான முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் வைத்தியர் பி.ஜே.சி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தடுப்பூசிகளுக்கு தகுதியான தற்போதுள்ள வயதெல்லை எதிர்காலத்தில் மாறக்கூடும் என்று குழந்தை நல வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு அறிகுறிகள் வெளிப்படாவிட்டாலும், அவர்கள் கொரோனா வைரசை ஏனையவர்களுக்கு பரப்புவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் பி.ஜே.சி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
