ராஜபக்ச குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் : எதிர்க்கட்சி எம்.பி கோரிக்கை
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் என உயர் நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்யாக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டு போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “பொய்யுரைப்பதும் ஜனநாயக உரிமை என்று குறிப்பிட்ட சட்டத்தரணிகளும் ஆளும் தரப்பில் உள்ளார்கள். வன்முறைகளுக்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
ஆனால் 2022ஆம் ஆண்டு போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தை கைப்பற்றி, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பதற்கு வந்தவர்கள் தான் தற்போது அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளார்கள் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு புரிந்துணர்வுடன் பொய்யுரைத்தார்கள். இன்றும் பொய்யுரைக்கிறார்கள். சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டே மக்கள் அதிகாரத்தை வழங்கினார்கள். ஆகவே அரசாங்கத்தின் இருப்பு நீதியமைச்சிலேயே தங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஊழல் மோசடி தொடர்பில் தன்னிடம் 400 கோப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்டார். அவற்றின் ஒருசிலவற்றை வெளிப்படுத்தினார். அந்த கோப்புக்களுக்கு என்ன நேர்ந்தது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில்
எதிர்வரும் காலங்களிலாவது அந்த ஊழல்மோசடி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா, இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களின் பெயர்களை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?
ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஊழல்வாதிகளுடன் ‘டீல்’ வைத்திருந்ததை மக்கள் அறியவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), ஒருமுறை நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவை (Anura Kumara) நோக்கி “உங்களின் அனைத்து விடயங்களையும் நான் அறிவேன் அவற்றை சொன்னால் கட்சியும் இல்லாமல் போகும், நாட்டை விட்டு வெளியேற நேரிடும்” என்று குறிப்பிட்டார்.
அதற்கு இன்றுவரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதிலளிக்கவில்லை. ஆளும் தரப்பிலும் ஊழல் மோசடியாளர்கள் உள்ளார்கள் பேச்சினால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது. சட்டத்தை இயற்றி ஊழல்வாதிகளை சட்டத்தின் முன்னிறுத்துங்கள்.
தொழில்வாய்ப்புக்களை வழங்கியவர்
இன்றுவரை ஒரு ஊழல் மோசடியாளர்களை கூட சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. அரசாங்கத்தின் முன்னிலையில் உள்ளவர்களின் குடும்பத்தாருக்கு மகிந்த ராஜபக்சவே தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தார். ஆனால் இன்று அவரை திருடன், திருடன் என்று விமர்சிக்கின்றீர்கள்.
நாடாளுமன்ற குழுக்கள் ஊடாக வெளிப்படுத்தப்படும் ஊழல் மோசடிகளை வெறும் செய்தியாக்காமல் உரிய சட்டங்களை இயற்றி உரிய நடவடிக்கை எடுங்கள். இதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ரால் ஆகியோர் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீ திமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர்களுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்து ஊழல்வாதிகளை பாதுகாக்க போவதில்லை என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
