அநுர ஆட்சியில் தொடரும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் : சாணக்கியன் பகிரங்கம்
ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் பேசும்போது வரவேற்கத்தக்க கருத்துக்களைக் கூறினாலும், நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று (24) இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தைப்பொங்கல் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு காலத்தில் முன்வைத்த "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கை, தற்போதைய ஆட்சியின் கீழ் கேள்விக்குறியாகியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம்
முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கான தீவிர நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தீபாவளி அல்லது பொங்கலுக்குள் ஒரு தீர்வு கிடைக்கும் என்று சம்பந்தன் மிகுந்த நம்பிக்கையுடன் கூறியதற்கு அந்தச் சூழலே காரணமாக இருந்தது.

ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடமாகியும், அரசியல் தீர்வு தொடர்பாக எந்தவொரு காத்திரமான நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.
மக்களாட்சியின் முக்கிய அங்கமான மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும், அரசாங்கம் ஒரு தெரிவுக்குழுவை நியமித்து, தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இன்னும் ஆராய்ச்சிகளையே செய்து கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை
ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் பேசும்போது வரவேற்கத்தக்க கருத்துக்களைக் கூறினாலும், நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த கால அரசாங்கங்களை விடவும் மோசமான முறையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இப்போதைய ஆட்சியிலும் தொடர்கின்றன“ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |