அதானி குழுமத்திற்கு அரசாங்கம் பச்சைக்கொடி
எரிசக்தி துறையை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்களுடனோ அல்லது அதானி குழுமம் போன்ற சர்வதேச நிறுவனங்களுடனோ இணைந்து செயற்படுவதில் தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், மன்னாரில் 500 மெகாவொட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு அதானி குழுமத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் மேலும் பல நிறுவனங்கள் அனல் மின் நிலையங்களை நிறுவ அனுமதி பெற்றுள்ளது.
50 மெகாவொட்களுக்கு மேல் உற்பத்தி செய்யக்கூடிய சூரிய, மிதக்கும் மற்றும் கடலோர காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து திறந்த விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய, தமக்கு 400இற்கும் விலை மனுக்கள் வந்ததாகவும், நில இருப்பின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதானி குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின்சார சபையினால் மாத்திரமே கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
