வியாழேந்திரன் மீதான வழக்கு ஒத்திவைப்பு!
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட ஆறு பேர் மீதான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் தலை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த வியாழேந்திரன் உட்பட ஆறு பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கினை ஏப்ரல் 04ஆம் திகதி வரை ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.
