ஆப்கானில் பயங்கரம் - தொடர் குண்டுவெடிப்புக்களால் பலர் பலி
ஆப்கானிஸ்தானில் இன்று இடம்பெற்ற நான்கு பாரிய குண்டுவெடிப்புகளில் பலர் கொல்லப்பட்டதாகவும், பெருமளவானோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மசார்-இ-ஷெரிப் நகரில் உள்ள ஷியா மசூதியில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 87 பேர் காயமடைந்ததாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ். அமைப்பு, ஷியா மசூதி வழிபாட்டாளர்களால் நிரம்பியிருந்தபோது, பை ஒன்றில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறியுள்ளது.
ஐ.எஸ் முன்னாள் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளரின் மரணங்களுக்கு "பழிவாங்கும்" உலகளாவிய பிரசாரத்தின் ஒரு பகுதி என இந்த தாக்குதல் குறித்து ஐ.எஸ். தெரிவித்துள்ளது.
இரண்டாவது குண்டுவெடிப்பானது, குண்டூஸ் பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகே வாகனம் ஒன்று வெடித்ததன் மூலம் நிகழ்ந்தது. இதில், 4 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர் என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் உரிமை கோரியுள்ளது.
கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் வீதியோர கண்ணிவெடியில் தலிபான் வாகனம் சிக்கியதில் நான்கு தலிபான் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
நான்காவது குண்டுவெடிப்பு ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள நியாஸ் பெய்க் பகுதியில் இடம்பெற்றது.புதைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.
