ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்- தலிபான்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேவேளை ஆப்கானிஸ்தானின் எல்லையோர பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இவ்வாறான நிலையில், அண்மையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் தெரிவித்தனர்.
இதில் 2 குழந்தைகள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் கூறும் போது,
நாங்கள் உலகம் மற்றும் அண்டை நாடுகளிடமிருந்து பிரச்சினை மற்றும் சவால்களை எதிர்கொள்கிறோம். குனார்வில் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
தேசிய நலன்கள் காரணமாக அந்த தாக்குதலை பொறுத்துக் கொண்டோம். ஆனால் அடுத்தமுறை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் கூறும்போது,
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் சகோதர நாடுகள் ஆகும். இரு நாட்டு அரசாங்கங்களும், மக்களும் பயங்காரவாதத்தை ஒரு தீவிர அச்சுறுத்தலாக கருதுகின்றனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
