கட்டுநாயக்காவில் தரையிறங்கும் விமானங்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் கட்டணத்தை ஒரு வருடத்திற்கு 50 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (6) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த முடிவு விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள விமான நிலையத்திற்கு
அதேவேளை மத்தள விமான நிலையத்திற்கு அதிகளவு விமானங்களை வரவழைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக முதல் நான்கு வருடங்களில் விமான சேவை நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
முதல் ஆண்டில் 100 சதவீதமும், இரண்டாம் ஆண்டில் 50 சதவீதமும் கட்டணத்தை தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
இது தொடர்பான முடிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
சிவில் விமான போக்குவரத்து சட்டத்தின் கீழான முடிவுகள் மீதான விவாதத்திலேயே நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
