அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து - டிசம்பரில் திருமணம் செய்யவிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேரை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி, பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கோர விபத்து இன்று (16.09.2025) அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த குறித்த பெண், டிசம்பர் மாதம் திருமணம் செய்ய இருந்ததாக தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை
விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் கஹதுடுவ வைத்தர மாவட்ட வைத்தியசாலை மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த ஒருவரை நாட்டிற்கு வந்ததும் அழைத்து வருவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சிற்றூர்தியில் செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது உயிரிழந்த பெண் சிற்றூர்தியின் முன் இடது இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளவிருந்த நபர் சிற்றூர்தி ஓட்டுநர் எனவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாரதியின் அதிவேகமும், உறக்கமும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
