அளம்பில் துயிலுமில்ல காணியை இராணுவம் சுவீகரிக்க முயற்சி - தடுத்து நிறுத்திய மக்கள்!
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இலங்கை இராணுவத்தின் 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் இன்றையதினம் தடுத்து நிறுத்தப்பட்டது.
குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.
எதிர்ப்பு
இந்த நிலையில், மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.
அத்தோடு குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் அங்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவைத்திணைக்களத்தினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மேலும், குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி.ஜெகநாதன், பீற்றர் இளஞ்செழியன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துயன், மாவீரர்களின் பெற்றோர்கள், கிராம மக்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.
மாவீரர் துயிலுமில்லக் காணி
குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை தற்போது 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதுடன், அங்கு இரணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகள், இராணுவத்தினருக்கான விளையாட்டு செயற்பாடுகள் இடம்பெறும் இடமாகவும் அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணி காணப்படுகின்றது.
அது தவிர குறித்த காணியில் இராணுவத்தினரால் உணவகம் ஒன்றும் நடாத்தப்பட்டு வருகின்றது.
மக்களின் கோரிக்கை
இந்த நிலையில், துயிலுமில்லக் காணியின் வெளிப்புறத்திலேயே வருடா வருடம் மாவீரர் தினத்தில் மாவீரர் நாள் அஞ்சலிகள் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சூழலில் அண்மையில் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்க அரசியல் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் முன்வரவேண்டும் என வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
