யாழில் இளைஞன் பலி : சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள்
சீரற்ற வானிலையால் நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக பதிவான மரணங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விடயம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (15) காலை 6:00 மணிக்கு வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மரணங்கள்
அந்தவகையில், யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
வயலில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகள் பகுதியளவில் சேதம்
அத்துடன் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 104 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் மேலும் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |