இந்திராகாந்தி கொலையை பெருமைப்படுத்த அனுமதித்தமை - கனடாவை சாடும் அலி சப்ரி!
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலையை பொதுவெளியில் பெருமைப்படுத்தியதை அனுமதித்தமைக்காக கனடாவை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை மேம்படுத்துதல் என்ற போர்வையில் எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் புகலிடங்களை வழங்குவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருமைப்படுத்தும் நிகழ்வு
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையை கனடாவில் உள்ள காலிஸ்தானிய தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் பெருமைப்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில், பயங்கரவாத செயல்பாடுகளை பெருமைப்படுத்த அனுமதிப்பதன் மூலம், அடுத்த தலைமுறை இளைஞர்கள் தவறான முறையில் வழிநடத்தப்படுகிறார்கள் என இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
இந்திரா காந்தி கொலை
1984 ஒக்டோபர் 31ஆம் திகதி தன்னுடைய சீக்கிய மெய்பாதுகாவலர்களினால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
சீக்கிய பொற்கோயிலுக்குள் படைகளை அனுப்பியதற்காக பழிவாங்கும் செயலாகவே இந்த கொலை பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், இதனை பெருமைப்படுத்தும் வகையிலேயே கனடாவில் காலிஸ்தானிய பிரிவினைவாதிகளால் பொதுவெளியில் இந்திரா காந்தியின் உருவ பொம்மை வைக்கப்பட்டு, அதன் மீது இரண்டு சீக்கிய மெய்காவலர்கள் துப்பாக்கி சூட்டை நடத்துவது போன்ற உருவங்களை காட்சியப்படுத்தியிருந்தனர்.