வீசப்படும் எலும்புத்துண்டுகளுக்கு விசுவாசம் காட்டும் அல்லக்கை அமைச்சர்..!
தமிழர்களின் போராட்ட வரலாறு, ஏன் ஆயுதம் ஏந்தி போராடினார்கள், இன்னும் எதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதை எல்லாம் தெரிந்து தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது கருத்துக்களை வெளியிடுகின்றாரா? அல்லது சிறிலங்கா அரசாங்கம் போடும் எலும்புத்துண்டுகளுக்காக குரைத்துக்கொண்டிருக்கின்றாரா என தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகம் கிளம்பியுள்ளது.
தமிழ் மக்களின் விடயங்களில் வெளிவிவகார அமைச்சரும், அதிபர் சட்டத்தரணியுமான அலி சப்ரி அண்மைய நாட்களில் வெளியிட்ட கருத்துக்களானது பாரிய அதிர்வலைகளை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
ஏமாற்று அரசியல்
"இவரது கருத்துக்களை சிங்கள ஆட்சியாளர்களின் கால்களை கழுவி விடும் தமிழ் முலாம் பூசப்பட்ட சிங்களத்தமிழர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் உணர்வுபூர்மான தமிழ் மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." இப்படி சமூக வலைத்தளங்களில் அலி சப்ரியை விமர்சிக்கும் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது.
இப்படி இருக்கையில், அண்மையில் பிரத்தியேக ஊடகம் ஒன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டிருந்தார்.
குறித்த நேர்காணல் நிகழ்ச்சியில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு அலி சப்ரி வழங்கிய சில பதில்களானது இலங்கையில் வாழும் தமிழ் மக்களையும், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகளையும் சீற்றம் கொள்ள வைத்துள்ளது.
அதாவது, "பிரிவினை கோரி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமையால் ஏற்பட்ட இழப்புக்களை நன்றாகவே உணர்ந்துள்ள தமிழ் தலைவர்கள், புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களின் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு சிக்கிக்கொண்டு மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள்." என அலி சப்ரி கூறியுள்ளார்.
"அலி சப்ரி சேர்ந்து கூத்தடித்துக்கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதிகளின் இனவெறிச் செயல்கள் கால காலமாக தொடர்ந்து கொண்டிருப்பதாலும், அலி சப்ரியால் தற்போது உத்தமர்கள் எனக் காட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள் என்பவற்றுக்காகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்பட்டது.
இனப்படுகொலை
இறுதி யுத்தத்தில் சிறிலங்கா அரசு திட்டமிட்டு நடத்திய இனவெறித்தாக்குதலில் குழந்தைகளை இழந்து, பிள்ளைகளை இழந்து, கணவனை இழந்து, மனைவியை இழந்து ஆறாத வடுவொடு இருக்கும் தமிழர்களின் உணர்வுகள் என்ன என்பது அலி சப்ரி அவர்களுக்கு துளியவும் புரியவில்லை.
இறுதி யுத்தத்தில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது திட்டமிட்ட இனப்படுகொலைதான் என சர்வதேசமே கூறுகிறது.
ஆனால், இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை நடக்கவில்லை என சிங்களவர்களுடன் சேர்ந்து வாய்க்கு வந்தபடி புளுகிக்கொண்டிருக்கிறார்.
ஒரு வேளை இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அலி சப்ரி அவர்கள் சுய நினைவின்றி இருந்தாரா? என சமூக ஊடகங்களில் சிலர் கேட்கின்றனர்.
நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக போலி அரசியலை செய்துகொண்டு, சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்காக சிங்கள ஆட்சியாளர்களுடன் சேர்ந்து கொட்டமடித்துக்கொண்டிருக்கிறார்.
கையாலாகாத அமைச்சர்
கடந்த காலங்களில் நாட்டில் கோவிட் தோற்றால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் ஜனாஸாவை எரித்த விடயம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த விடயம் தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
அந்த காலப்பகுதியில் அலி சப்ரி அவர்கள் தனது சமூகத்திற்கு கூட கையாலாகாத நீதியமைச்சராக இருந்தார்.
இப்படி தன்னுடைய சமூகத்து மக்களின் வலிகளையே புரிந்துகொள்ள முடியாத இவரால் எப்படி வேறொரு சமூகத்தின் அவலத்தை புரிந்து கொள்ள முடியும்.
இப்படி இருக்கையில், கொத்து கொத்தாக தமிழ் மக்களை கொன்றொழித்த காடையர்களின் பக்கம் நின்று தற்போது இன ஒற்றுமையையும், இன நல்லிணக்கத்தையும் பற்றி கூவிக்கொண்டு சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
கொந்தளிக்கும் தமிழ் மக்கள்
நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் அவரை சுற்றி உள்ள சர்வாதிகாரிகள் தான் என்பது நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும்.
நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டும், சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணத்தை அள்ள வேண்டும் என்பதற்காக அதிபர் ரணில், ராஜபக்சக்களுடன் சேர்ந்து கள்ள அரசியல் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்.
இதனால் பாதிக்கப்படப்போவது தமிழ் சமூகம் மட்டுமல்ல முஸ்லீம் சமூகமும்தான் என்பது அவருக்கு புரியவில்லையா.
தமிழ் மக்களுக்கு அலி சப்ரி எந்த நல்ல விடயமும் செய்யாவிட்டாலும் பரவயில்லை, படித்த முட்டாள் போல் பேசுவதை நிறுத்தி அமைதியாக இருந்தாலே போதும்.
இல்லையெனில், ராஜபக்ச குடும்பத்திற்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலைமைகள் அலி சப்ரிக்கும் ஏற்படலாம்.
பிறகு வேறு நாடுகளில் பதுங்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம்." இவ்வாறு தங்களது காட்டத்தை தமிழ் மக்கள் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.