புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக ஏற்க இயலாது - அலி சப்ரி!
"பயங்கரவாதிகளை விசாரித்தல் என்ற பெயரில் அப்பாவிகளை அடைத்து வைத்து விசாரிக்க முடியாது, எனவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக ஏற்க முடியாது."
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன? என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஏற்க முடியாத விடயங்கள்
தொடர்ந்து அவர்,
"புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபில் என்னால் ஏற்க முடியாத விடயங்களும் உள்ளன.
ஒரு நபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பிரதிக் காவல்துறைமா அதிபருக்கு அதிகாரம் வழங்குவதை என்னால் ஏற்க முடியாது, அந்த அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமே இருக்க வேண்டும்.
இவ்வாறான சில விடயங்களை அமைச்சரவைக் கூட்டத்திலும் நான் கூறியிருந்தேன்.
அனைத்து தரப்பிடமும் கலந்துரையாடி இந்தச் சட்டமூலம் திருத்தப்பட வேண்டும், சட்டத்தரணிகள் சங்கத்துடனும் பேசி முடிவெடுக்க வேண்டும்.
பயங்கரவாதிகளை விசாரிக்கும் பாணியில் அப்பாவிகளை அடைத்து வைத்து விசாரிக்க முடியாது." இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
