மதுபானசாலை அனுமதி விவகாரம்! அரசாங்கத்தின் அறிவிப்பால் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முன்னாள் அமைச்சர்களுக்கு மதுபானசாலை அனுமதிகள் இலஞ்சமாக வழங்கப்பட்டதாக அறிவித்துள்ள விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுபானசாலை அனுமதிகளைப் பெற்ற அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.
ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அனுமதிகளைப் பெற்ற அமைச்சர்களுடன் தொடர்புடைய சிலரின் பெயர்கள் மட்டுமே இருந்தன என நளின் பண்டார கூறியுள்ளார்.
அனுமதிகளை ரத்து செய்ய கோரிக்கை
ஆனால், பெரும்பான்மையான பெயர்களில் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளார்களா இல்லையா என்பதை அரசாங்கம் வெளியிடவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியாக, அந்தப் பெயர்களை நாடாளுமன்றத்திற்கு வெளியிடுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தோம் என்றும், அனுமதியை யார் எடுத்தார்கள், அதில் யார் தலையிட்டார்கள் என்பதை நாடாளுமன்றத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தமது கட்சி கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத அனுமதியை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இதுவரை அரசு அனுமதியை இரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அனுமதியைப் பெற்றவர்கள், அரசுக்கு பணம் கொடுத்து, மதுபானசாலை அனுமதியை இரத்து செய்வதை நிறுத்திவிட்டார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி சட்டத்தை மீறி மதுபானசாலை அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தால், அரசாங்கம் உடனடியாக அவற்றை இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
