தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் : சுரேஸ் வலியுறுத்தல்
தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்ப்பையே தமிழ் மக்கள் உள்ளூர் அதிகார சபை தேர்தலின் மூலம் வழங்கியுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”மக்கள் வழங்கிய தீர்ப்பின்படி ஆட்சி அதிகாரத்தை தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து செயற்படுத்துவது அவசியம்.
தமிழரசுக் கட்சி
இதேநேரம் தமிழரசுக் கட்சி (ITAK) அதிக ஆசனங்களை எடுத்துக் கொண்டாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு இருக்கவில்லை. இதனால் தமிழ் மக்களின் நலன்கருதி ஏனைய தரப்பினருக்கும் விட்டுக்கொடுப்புகளுடன்செயற்பட தமிழ் தரப்புகள் தயாராக வேண்டும்.
இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. இதேநேரம் தற்போது பெரிய, சிறிய என்ற நிலையில் எந்தவொரு கட்சியும் இல்லை. அனைத்தும் சமமான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. தவறுகள் இனிமேல் இழைக்கப்படகூடாது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, போன்ற கட்சிகள் தேசியத்தை வைத்தே தேர்தலை எதிர்கொண்டனர். இந்த கட்சிகள் அதிகப்படியான ஆசனங்களை பெற்று இருக்கின்றன.
ஏறத்தாழ 500 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 307 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 106 ஆசனங்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி 80 ஆசனங்களும் பெற்றுள்ளது. எனவே ஏறத்தாழ 500 ஆசனங்களை கூட்டாக பெற்றுள்ளனர்.
மக்களிடம் வைத்த கோரிக்கை மக்கள் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு கட்சிக்கும் அதிக படியான ஆசனங்களை வழங்கியிருக்கின்றனர்.
மக்கள் கொடுத்த ஆணைக்கு ஏற்ப இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கூட்டாக பேசி ஆட்சி அதிகாரங்களை தமிழ் மக்கள் நிர்வாகத் திறனைகளை ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
தேசிய மக்கள் சக்தி
மாகாண சபையினை நடத்த முடியாதவர்கள், நிதியினை திருப்பி அனுப்பியவர்கள், நிர்வாகத்தினை செயற்படுத்த முடியாதவர்கள் என பல்வேறுபட்ட எதிர்ப் பிரசாரங்கள் பல்வேறு தமிழ் தரப்பினர்களிடம் இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கமுடியாத சூழ்நிலையில் தான் உள்ளனர். எனவே தமிழ் மக்களின் அதிகாரம், எதிர்காலம், உரிமைகள் என்பவற்றை புறம்தள்ளி நடக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.
மக்கள் ஆசனங்களை அனைவருக்கும் பகிர்ந்தளித்துள்ளனர். பேச்சு வார்த்தைகள் சரியாக நடைபெறுமாக இருந்தால் ஓர் அணியில் நின்று ஆட்சி அதிகாரங்களில் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் இருக்காது சிறப்பாக அமையும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
