வடமராட்சி கிழக்கு மக்களின் அவலம் : ரஜீவன் mp மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்குவரத்து சீரின்மை தொடர்பாக பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றனர்.
அண்மையில் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் மருதங்கேணிவரை நடந்து சென்றுள்ளனர்.
பொறுப்புணர்வின்றி செயற்படும் பேருந்துகள்
பருத்தித்துறை கேவில் வரை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் எந்தவித பொறுப்புணர்வுமின்றி தாம் நினைத்த நேரத்திற்கு புறப்படுவதும், சென்றடைவதாலும் மாணவர்கள் ஊழியர்கள், பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

குறிப்பாக கட்டைக்காட்டிலிருந்து பருத்தித்துறை வரை பாடசாலை சேவைக்காக ஈடுபடும் அரச பேருந்துகள் வடமராட்சியின் பிரபல பாடசாலைகளை சென்றடைய காலை 7:50 நிமிடம் ஆகுகின்றது. இதனால் நாளாந்தம் அரைமணி நேரம் மாணவர்கள் தாமதித்து செல்வதுடன் மந்திகை மருத்துவமனை உட்பட பல அரச ஊழியர்கள் தமது கடமைக்கு நேரத்திற்கு செல்ல முடியயாமல் தினமும் பாதிப்படைகின்றனர்.
இதேவேளை பருத்தித்துறையிலிருந்து கேவில் வரை நீண்ட நேர இடைவெளிக்கொரு பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன. குறிப்பாக பருத்தித்துறை கேவில் பேருந்து சேவை பிற்பகல் 2:15 க்கு பின்னர் 6:20 மணிக்கே பருத்தித்துறையிலிருந்து கேவிலுக்கான சேவையில் ஈடுபடுகின்றது.
பலமணி நேரமாக வீதிகளில் காத்திருக்கும் மாணவர்கள்
இதனால் பல மாணவர்கள் பலமணி நேரமாக வீதிகளில் காத்திருக்கின்றனர். பருத்தித்துறை வவுனியா பேருந்து சேவை, இரவு 8:30மணிக்கு இடம்பெறும் பருத்தித்துறை மருதங்கேணி ஊடான கொழும்பு பேருந்து சேவை என்பனவும் 5 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கேவில் பேருந்து சேவை கேவிலுக்கு செல்லாது கட்டைக்காடு கிராமத்துடன் நிறுத்தப்படுவதனால் 5 km தூரம் வரை கேவிலுக்கு மாணவர்கள் உட்பட பயணிகள் இரவிரவாக நடந்து செல்கின்றனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பெரிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவரால் இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமை யாளருக்கு அறிவுறுத்தப்பட்டும் சிறிய பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன.
இதேவேளை தனியார் பேருந்து சேவைகள் எந்தவித பொறுப்புணர்வுமின்றி தாம் நினைத்த நேரம் சேவையில் ஈடுபடுவதும், நினைத்த நேரம் சேவையை நிறுத்துவதும் வழமையாகவுள்ளது.
வருமானம் இல்லையென சேவையை நிறுத்தும் தனியார் பேருந்துகள்
தனியார் பேருந்து சேவை வழங்குனர்கள் தமக்கு உரிய வருமானம் இன்மையை காரணம் காட்டி சேவையை இடைநடுவில் நிறுத்துகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் தனியார் போக்குவரத்து அதிகார சபையிடம் முறைப்பாடு செய்தும் அவர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

நாகர் கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை குறித்த சேவை வழங்குனரால் பல வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
தேவையற்று பொங்கியெழும் ரஜீவன் mp
இந்நிலையில் ஒருங்கிணைப்பு தலைவராக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் பருத்தித்துறை நகரசபையின் தீர்மானங்களை நிறுத்துமாறு கடிதம் அனுப்புவதும், நகரசபைக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என பொங்கி எழும் ரஜீவன் mp அவரது அரசாங்கத்தின் கீழேயுள்ள இலங்கை போக்கவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து அதிகார சபைகளுக்கு நடவடிக்கை எடுக்க அவரால் முடிவதில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் பருத்தித்துறை 750 வழித்தட பேருந்து சேவை மிக சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |