நாடளாவிய ரீதியில் ஆரம்பமான புலமைப்பரிசில் பரீட்சை: ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
புதிய இணைப்பு
இலங்கை முழுவதும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது இன்று (15.09.2024) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
சுமார் 3 இலட்சத்து 23 ஆயிரத்து 879 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
அந்தவகையில் மலையகத்திலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்தது.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
அத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இரண்டாம் இணைப்பு
நாடெங்கிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் அமைதியான முறையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றியதை காணமுடிந்தது.
இன்று காலை ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பெரியவர்களிடம் ஆசிகள் பெற்று பாடசாலைகளுக்கு சென்றதை காணமுடிந்தது.
புலமைப்பரிசில் பரீட்சைகள்
குறிப்பாக பெற்றோர் இன்று காலை ஆர்வத்துடன் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துவந்ததை காணமுடிந்தது.
மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றன.
இறுக்கமான நடைமுறைகளுடன் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை தமக்கு நியமிக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்கு சரியான நேரத்தில் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகி நண்பகல் 12.15 மணி வரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு அருகில் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) கோரிக்கை விடுத்துள்ளது.
பெற்றோர்களிடம் கோரிக்கை
90 நியமிக்கப்பட்ட மையங்களில் இருந்து 100 மீட்டருக்குள் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்கு பரீட்சை தொடங்கவுள்ள நிலையில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இந்நிலையில், புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தங்களது பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்குமாறும் வைத்தியர் பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |