எரிவாயு விலை உயர்வு தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
லாக்ஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்த தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நிறுவனத்தின் நிதி மற்றும் வரிப் பிரச்சினைகளே விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
இன்று (14) நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், அரசுக்குச் சொந்தமான லிட்ரோ கேஸ் நிறுவனம் நாட்டின் எரிவாயு சந்தையில் கிட்டத்தட்ட 90 சதவீத விநியோகத்தை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசுக்குச் சொந்தமான லிட்ரோ கேஸ் நிறுவனம் மாதந்தோறும் சுமார் 20 லட்சம் எரிவாயு சிலிண்டர்களை நிரப்பி சந்தைக்கு வெளியிடுகிறது என்றும், ஆனால் லாக்ஃப்ஸ் நிறுவனம் மாதந்தோறும் 3 லட்சம் எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே வெளியிடுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
லாக்ஃப்ஸ் எரிவாயு விலை
அதன்படி, தனியார் துறைக்குச் சொந்தமான மஞ்சள் நிற லாக்ஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மட்டுமே எரிவாயு விலை உயர்ந்துள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
லாக்ஃப்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வசதிகளின்படி, எரிவாயு விநியோகத்தில் 60 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும், மீதமுள்ள 40 சதவீதம் உள்ளூர் சந்தைக்கு வெளியிட அனுமதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது முழு நாட்டிற்குமான எரிவாயு நெருக்கடி அல்ல, மாறாக லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினை மாத்திரமே என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |