அனைத்து குற்றங்களிலுமிருந்து விடுபட்ட அனோஜன் சிவராசா: ஜனாதிபதியை சந்தித்த குடும்பத்தினர்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்கு தலையிட்டு நடவடிக்கை எடுத்தமைக்காக, அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
இன்று (12.11.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்ளுள்ளது.
இதன்போது ஜனாதிபதி, இலங்கை மக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்நிற்பது தனது பொறுப்பு எனத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அனோஜன் சிவராசா
அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இன, மத, கட்சி மற்றும் நிற வேறுபாடுகளைக் கடந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட அனைவருக்கும் விசேட நன்றிகள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அனோஜன் சிவராசா தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தமது மகனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்கு ஆரம்பம் முதலே தலையிட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், சட்டரீதியாக உதவிய வழக்கறிஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அனோஜனின் தாயார் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை முதன்முறையாகச் சந்தித்தபோது வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த், இதே காலப்பகுதியில் பங்களாதேஷ் தம்பதியினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் காரணமாக அனோஜனின் பெற்றோர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்கவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
You may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |