பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு தலையிடி..!
இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடனை தேயிலையின் மூலம் நிவர்த்திற்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
எனினும் இந்த திட்டம் ஏற்றுமதியாளர்களுக்கு பயனை வழங்காது என்பதால் உள்நாட்டு டொலர் வருவாய் பதிப்படையும் என பெருந்தோட்ட நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானில் இருந்து கடந்த காலத்தில் கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்கான கடனை தேயிலையின் மூலம் பெறுமதி-பண்டமாற்று அடிப்படையில் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
எனினும் இந்த திட்டத்தில் அப்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா பெருந்தொற்று தாக்கம் செலுத்தியமையால் உள்நாட்டு டொலர் வருவாயை கருத்திற்கொண்டு நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நிலை எழுந்திருந்தது.
பொருளாதார நெருக்கடி
இந்த நிலையில் குறித்த திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தவுள்ளதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் தொமர் வருவாயை குறைக்கின்ற போதிலும் தற்போது அதற்கான நகர்வுகள் எடுக்கப்படுகின்றமை குறித்த தகவல்களை அவர் முழுமையாக வெளியிடாமை ஐயங்களை எழுப்புகின்ற நிலையில், தேயிலையினூடான வருவாய் மேலும் வீழ்ச்சியடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பபிற்காக போராடிவரும் இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மேலும் நெருக்கடி நிலையை உருவாக்கும்.
ஈரானிடம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக செலுத்த வேண்டிய 251 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக, ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேயிலையை 48 மாதங்களுக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
தேயிலை ஏற்றுமதி
எனினும், தற்போது மாதத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான தேயிலையை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் தேநீர் ஒரு உணவுப் பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த நடைமுறை ஐக்கிய நாடுகளின் அல்லது அமெரிக்கத் தடைகளை மீறாது என சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும் கறுப்புப் பட்டியலிடப்பட்ட ஈரானிய வங்கிகள் இந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாது எனவும், சாதகமான கருத்துக்கள் சிறிலங்கா அரச தரப்பில் முன்வைக்கப்படுகின்ற போதிலும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏற்றமதியாளர்கள் இதன்மூலம் பாதிக்கப்படுவார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
