கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல்! சஜித் கேள்வி
இலங்கை கடல் எல்லைக்குள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து தெளிவான அறிக்கை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட சஜித் பிரேமதாச,
“அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டார்பிடோ உதவியுடன் நேற்று கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.
இராஜதந்திர சம்பவம்
ஈரானிய கப்பலில் இருந்த மக்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக இலங்கை இராணுவத்தைப் பாராட்டுகின்றேன்.

எனினும் இராஜதந்திர சம்பவம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இன்னும் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை.
நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு கடுமையான சூழ்நிலை உருவாகியுள்ளது.
நேற்று (04) நாட்டிற்கு அருகில் இதுபோன்ற ஒரு கப்பல் அழிக்கப்பட்டதை அரசாங்கம் சபைக்கு அறிவிக்கத் தவறியது நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கிறது.
காலி, கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய பிரஜைகளின் உடல்களை அடக்கம் செய்வதற்காக மருத்துவர்கள் 40 அடி கொள்கலகளை கோரியுள்ளனர்.
அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தும் என்று நம்புகின்றேன். நமது நாட்டின் கடல் எல்லைகளில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அறியாமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வாறு பிரச்சினை ஏற்படாது என்று கூறுகின்றீர்கள்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |