போராட்டக்காரர்கள் மீது பாயும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் - 40 ஆண்டுகளாக தொடரும் நடைமுறை - புபுது ஜாகொட குற்றச்சாட்டு
இலங்கையில் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முற்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரி 1979 ஆம் ஆண்டு முதல் மக்கள் எதிர்ப்புகளை முன்வைத்து வருகின்றனர் என சுட்டிக்காட்டினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாமை குறித்தும் இலங்கையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தியும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டமொன்றை நடத்தியிருந்தது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது சிறிலங்கா அரசாங்கம் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்துள்ளது.
கைது செய்யப்படும் தொழிற்சங்க தலைவர்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரையும் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தாது அவர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது.
40 ஆண்டுகளாக தொடரும் நடைமுறை
இதற்கு முன் குறித்த சட்டம் உபயோகிக்கப்பட்டது போர் காலத்தில் மாத்திரமே. மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் இந்தச் சட்டம் மக்கள் எதிர்ப்புக்களை தாண்டி 40 ஆண்டுகளாக இலங்கையில் நடைமுறையில் இருக்கிறது.
குறித்த சட்டத்தின் மூலம் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வேண்டிய இடத்தில் தடுத்து வைக்கும் உரிமை உள்ளது.
சிங்கள மக்களுக்கு இந்தச் சட்டம் புதிதாக இருந்தாலும் தமிழ் மக்களிடையே இந்தச் சட்டம் பல வருடங்களாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஒரு சட்டத்தை தொழிற்சங்க தலைவர்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும் அரசாங்கம் உபயோகிப்பது தவறான விடயமாகும்” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான குடும்பஸ்தர் பிணையில் விடுவிப்பு
பயங்கரவாத தடுப்புச் சட்ட மீளாய்வு அறிக்கை கையளிப்பு

