ஒரு வாரத்தில் பெருமளவு கடன் பெற்ற அநுர அரசாங்கம் : ராேசி சேனாநாயக்க பகிரங்கம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), அதிகாரத்துக்கு வந்து ஒரு கிழமையில் வரலாற்றில் யாரும் பெற்றுக்கொள்ளாத கடன் தொகையை பெற்றுக்கொண்டுள்ளார் என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ராேசி சேனாநாயக்க (Rosi Senanayaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நேற்று (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் அலை ஒன்று ஏற்பட்டு அவரை ஜனாதிபதியாக நியமித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எரிபொருள் இறக்குமதி
ஆனால் அரசாங்கம் அமைந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வேலைத்திட்டங்களை பார்த்து மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மீது மக்களுக்கு விரக்தி நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் கடன்தொகையான 41 பில்லியன் டொலரை செலுத்துவது பெரிய விடயம் அல்ல என அநுரகுமார திசாநாயக்க அன்று தெரிவித்திருந்தார். அதேபோன்று பணம் அச்சிட்டும் கடன் பெற்றும் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஒன்று எதற்கு என அவர் கேட்டிருந்தார்.
எரிபொருள் இறக்குமதியில் அமைச்சருக்கும் தரகுப்பணம் செல்வதாகவும் அந்த பணத்தை இல்லாமல் செய்து, எரிபொருள் விலையை குறைப்பதாகவும் தெரிவித்தார்.
அரச சொத்துக்களை திருடியவர்களை 24 மணி நேரத்துக்குள் சிறையில் அடைப்பதாக தெரிவித்தார். இவ்வாறு பல்வேறு வாக்குறுதிகளை அவர் வழங்கி இருந்தார். ஆனால் இந்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கின்றாரா என கேட்கிறேன்.
ரணிலின் வேலைத்திட்டம்
கடன் பெறுவதில்லை என தெரிவித்த இவர்கள், வரலாற்றில் யாரும் பெறாத கடன் தொகையை அரசாங்கம் அமைத்து ஒரு வாரத்துக்குள் பெற்றுள்ளார்கள். பணம் அச்சிட்டுள்ளனர்.
அரசாங்கத்தை பெற்றுக்கொண்டாலும் இவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. அதேபோன்று நாட்டை அபிவிருத்தி செய்யவும் இவர்களிடம் வேலைத்திட்டம் இல்லை. அவ்வாறு இருந்தால் அதனை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
மேலும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்தார். அப்படியானால் அந்த வேலைத்திட்டங்களையும் அதனை எப்போது ஆரம்பிப்பது என்ற திட்டத்தையும் நாட்டுக்கு சொல்ல வேண்டும்.
எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய எந்த திட்டமிடலும் இல்லாமலேயே இவர்கள் தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனால் அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய மூன்றுபேரும் இருளில் துழாவிக்கொண்டு, ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வேலைத்திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |