பதவிகளைத் தக்க வைப்பதற்காக நாடகமாடும் அநுர அரசு : முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
இலங்கையில் ஜேவிபி தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை முன்வைக்க முடியாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எவ்வாறு தீர்வை பெற்று தருவார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை உள்ளூர் பொறிமுறையின் மூலம் பெற்றுத் தருவதாக தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உள்ளூர் பொறிமுறை மூலம் தீர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திலும் தென்னிலங்கையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் பொறிமுறையின் மூலம் தீர்வைத் தரப்போவதாக ஊடகங்களில் கருத்துக்களை அவதானித்தோம்.
இறுதி யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை இராணுவத்திடம் விசாரணைக்காக கையில் கொடுத்தோம் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என அவர்களைத் தேடி அலையும் உறவுகளுக்கு தெரியாது.
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என வீதி வீதியாக பல போராட்டங்களை உறவுகள் மேற்கொண்டும் இன்று வரை பொறுப்பு கூற வேண்டியவர்கள் பதில் வழங்காது மௌனம் காத்து வருகின்றனர்.
இலங்கை அரசாங்கம் உள்ளூர் விசாரணை மூலம் தீர்வை தருகிறோம் என காலத்துக்கு காலம் மாறி வரும் அரசாங்கங்கள் வாக்குறுதிகள் வழங்கி வரும் நிலையில் அதனை நாம் துளியளவும் ஏற்கவில்லை.
சர்வதேச விசாரணை
நாம் உள்ளூர் விசாரணைகளை ஏற்க மாட்டோம் என ஜெனிவாவில் தெளிவாக கூறியது மட்டுமல்லாது சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமாகவே எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தர முடியும் என முழுமையாக நம்புகிறோம்.
தற்போது பதவியில் உள்ள தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜேவிபி அரசாங்கம் அதன் பிரதமர் உள்ளூர் விசாரணை மூலம் தீர்வை பெற்று தரப் போகிறோம் என கூறுவது அவர்கள் தமது கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை உள்ளூர விசாரணை மூலம் பெற்று தருவோம் எனக் கூறினார்கள் நாங்கள் அதை ஏற்கவும் இல்லை அது சாத்தியப்படாது என்பதும் எமக்கு நன்கு தெரியும்.
ஏனெனில் நாம் ஐ.நா மனித உரிமை பேரவைக்கு செல்லும்போது சகோதர இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரும் ஒரே குடும்பத்தில் நான்கு பேர் காணாமல் போனமைக்காக ஐ.நாவில் நீதி கேட்டு அடிக்கடி வருகை தருகிறார்.
காணாமல் ஆக்கப்பட்ட லலித் குகன்
இதையே ஏன் நான் கூறுகிறேன் என்றால் தற்போது ஆட்சியில் உள்ள ஜேவிபி அரசாங்கம் இலங்கையில் தமது தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை பெற்றுத்தர முடியாத காரணத்தால் அவர்கள் இன்றும் ஐநாவில் நீதி கோரிச் செல்கிறார்கள்.
ஜேவிபியின் செயற்பாட்டாளர்களான லலித், குகன், யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இன்று வரை குற்றவாளிகள் யார் என அரச உயர் மட்டம் வரை தெரிந்த நிலையில் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜேவிபியாக முன்னர் செயற்பட்ட தமது தோழர்களுக்கான லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு என் நீதியை பெற்றுக் கொடுக்கவில்லை என கேட்க விரும்புகிறேன்.
ஆகவே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தோழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு கூட நீதியைப் பெற்றுத் தராத அரசாங்கமாக காணப்படுகின்ற நிலையில் தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த அரசாங்கங்களை போல பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் ஒரு நாடகத்தை மேற்கொண்டு வருகின்றனர்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
