தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் மௌனம் காக்கும் அநுர அரசு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழர்களின் தீர்வு விடயத்தில் இதுவரை எவ்வித சமிக்ஞையையும் வழங்கவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் (S.Raguram) தெரிவித்தார்.
அத்துடன் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம், ஈழத் தமிழர்களின் நினைவூட்டல் உரிமை போன்றவற்றுக்கு தற்போதைய அரசு தீர்வை வழங்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (05) இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் (Kumar Ponnambalam) 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”அநுரகுமார (Anura Kumara) அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுள்ளதுடன் ஜனாதிபதி தேர்தலில் மிக கணிசமான வாக்குகளை பெற்று இந்த அரசு அமைக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான சூழலிலே நீண்டு தொடர்கின்ற எங்களுடைய ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை, எங்களுடைய போராட்ட வரலாற்றில் நாங்கள் தீர்வுகளை நோக்கி நகர வேண்டுமாக இருந்தால் அந்த தீர்வுக்காக கொழும்பிலிருந்து முன்னெடுக்கப்படும் நகர்வுகள் தொடர்பில் நாங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
வெறுமனே எங்களுடைய அபிலாசைகளை கோரிக்கைகளை தன்னிச்சையாக நாங்கள் முன்னெடுப்பதை விட அவ்வாறான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்கு கொழும்பிலிருந்து அறிகுறிகளாக சமிக்ஞைகளை நாங்கள் எதிர்பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கவேண்டும்.
இன்று பதவி ஏற்றிருக்கக்கூடிய தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வலுவான கட்டமைப்புடன் இருந்தாலும் கூட கொழும்பிலிருந்து கிடைக்கின்ற செய்திகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வலுவான அரசியலில் எதை சாதிக்க வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றது.
கட்டமைப்பு மாற்றத்தினை முன்வைத்துள்ள அந்த அரசாங்கம் முற்று முழுதாக அந்த கட்டமைப்பு மாற்றத்தினை எடுத்து செல்ல முடியுமா? அல்லது அந்த கட்டமைப்பு மாற்றத்தினை மேலிருந்து கீழாக விதைத்து செல்ல முடியுமா? அந்த கேள்வியினை இன்று வலுவாக அறிவிக்க வேண்டிய சூழலைப் பெற்றுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு
நாங்கள் கேட்கலாம் அவர்களுக்கு மிகக் குறைந்த காலம் வழங்கப்பட்டுள்ளது, அவ்வாறான காலத்தில் அவர்கள் தங்களுடைய போக்கினை தாங்கள் செய்ய வேண்டியவற்றை நிரூபிக்க வேண்டிய காலப்பகுதி குறுகியது என சொல்லலாம்.
அரசியல் வாழ்வு என்பதும் கடந்த காலத்திலே சிறிலங்கா அரசாங்கத்தினை ஆண்டு கொண்டிருந்தவர்கள் விட்டுச் சென்ற பாதையில் இருந்து வித்தியாசமான பாதையில் நகர வேண்டும் என்ற சூழ்நிலைக்குள் தேசிய மக்கள் சக்தி தள்ளப்பட்டுள்ளது .
தனியே தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமில்லாது தெற்கிலிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு தான் பெரிய அச்சமாக இன்று உருவாகி வருகின்றது.
ஒரு எதிர்பார்ப்பு என்பது அது உச்சளவில் இருக்கின்ற பொழுது அந்த எதிர்பார்ப்பை எப்படி திருப்பி செய்து கொள்வது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு முனைப்பான முன்னகர்வை எடுத்து வருவதாக இன்னமும் உறுதிப்படுத்தப்படக்கூடிய தடயங்கள் எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.
ஈழத்தமிழ் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகின்ற நிகழ்வுகளை நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம். இதுவரைக்கும் அவ்வாறான முயற்சிகள் எங்களுடைய கண்களுக்கு அறிவிப்புலத்திற்கும் கிடைக்கவில்லை.
ஈழத் தமிழர்களின் பிரச்சினை
குறிப்பாக ஈழத் தமிழர்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான மனச் சுத்தியுடனான ஈடுபாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
எங்களுடைய மிக முக்கிய பிரச்சினைகளாக இருக்கக்கூடிய காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, படையினரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்ற காணி விடயங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வெளிப்படுத்த வேண்டும்.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், ஈழத் தமிழர்களின் நினைவூட்டல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பு அவசியமாக உள்ள பொழுது அதற்கான இணைப்பு அதிகார சபை ஒன்றை உள்ளடக்கிய அரசியல் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் யோசனை முன்வைக்கப்பட வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், இராணுவ மயமாக்கம் தகர்க்கப்பட வேண்டும், இராணுவக் குறைப்புகள் விளக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் இப்படியான விடயங்கள் ஊடாக ஒரு நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக வேண்டும். காலம் அவர்களுக்கு கட்டளையிட்டு இருக்கின்றது.
இதுவரை கடந்து வந்திருக்கின்ற நாட்கள் இந்த விடயங்கள் சார்ந்து அச்சம் பதிந்த ஆக்கபூர்வமான சமிக்சைகளை தர தவறி இருக்கின்றது என்பதனை நாங்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சர்வதேச விசாரணை
ஈழத்தமிழரின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து பேசுவதற்கு அவற்றைப் பற்றி உரையாடுவதற்கு அரசியலமைப்பு உருவாக்குவதற்கு முயற்சிகள் தொடர்பாக சொல்வதற்கு முன்னர் சர்வதேச மத்தியஸ்தர்களினுடைய பிரசன்னத்துடன் அதனைச் சொல்ல வேண்டும்.
சர்வதேச மத்தியஸ்தம் இல்லாத சந்தர்ப்பத்தில் மீண்டும் எங்களுடைய நேரத்தை நாங்கள் வீணடிக்கக் கூடாது. அவ்வாறான நிலையிலே புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துடன் பேச முடியும்.
அவ்வாறான நிலையில் நாங்கள் பேசி வருகின்ற தாயகம், தேசியம், சுயநிர்ணயம் தொடர்பில் விரிவான விவரணத்தை பேசக்கூடியவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் தேசிய குடும்பமாக ஒன்றிணைவதற்குரிய அங்கீகாரத்தை எங்களுடைய முதலாவது கோரிக்கையாக முன்வைப்பதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும்.
தரக்கூடிய தீர்வுப்பொதிகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசக்கூடியவர்களாக நாங்கள் இருக்கக் கூடாது. அல்லது வெவ்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் எங்களுடைய தீர்வுகளை நோக்கி பயணிக்க வேண்டியவர்களாக நாங்கள் தள்ளப்படுவோம்.
வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலம் சார்ந்த ஒருமைப்பாடும் தொடர்ச்சியும் பேணப்பட வேண்டும். வடக்கு கிழக்கு தாயகத்தினை நாங்கள் உரத்துச் சொல்லக் கூடிய வகையில் முன்னகர வேண்டும். புலத்தில் இருப்பவர்களது நிலையும் கருத்திற் கொள்ளப்படவேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |