மூடப்படும் நிலைக்கு வந்துள்ள யாழ். வேலணை வைத்தியசாலை! அரசின் அசமந்தம்
யாழ்ப்பாணம் (Jaffna) - வேலணை வங்களாவடி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவை செயற்பாடுகள் ஆளணிப் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு பகுதியளவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் தெரியவருகையில், தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாகவும் தீவகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுமான குறித்த வைத்தியசாலை கடந்த நல்லாட்சிக் காலத்தில் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனரத்னவினால் (Rajitha Senaratne) "பி" தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆனாலும் குறித்த தரத்திக்கு ஏற்ப ஆளணி வளங்களை நிவர்த்திக்கும் எந்தவிதமான பொறிமுறையையும் குறித்த அமைச்சர் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அலட்சியப் போக்கு
அதன் பின்னரும் அமைக்கப்பட்ட அரசாங்கங்களிடம் இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய தரப்பினரது பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அது கண்டுகொள்ளப்படாத நிலையில் இருந்து வந்தது.
ஆனாலும் இருந்த குறைந்தளவான ஆளணி வளங்களை கொண்டு குறித்த வைத்தியசாலையின் தரத்துக்கு ஏற்ப 24 மணி நேரமும் குறைந்த ஆளணியுடன் சேவை முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக இரு வைத்தியர்களே இவ் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இரவு பகலாக ஓய்வின்றி, தமக்கான விடுப்புகள் இன்றி சேவை செய்யும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தனர்.
இதேபோன்று தாதியர் பற்றாக்குறையும் இவ் வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இதுவும் துறைசார் அதிகாரிகள் கவனத்திற்கு பல தடவைகள் கெண்டு செல்லப்பட்ட போதும் அவ்விடயமும் அலட்சியப் போக்காக பார்க்கப்பட்டு கைவிடப்பட்டது.
ஆனாலும் குறித்த வைத்தியசாலையில் மாதாந்தம் 2500 இற்கும் அதிகமான நோயளர்களும் வருடாந்தம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நோயர்களும் சிகிச்சை பெற்றுவந்ததற்கான ஆதாரங்களும் வைத்தியசாலையின் ஒட்டப்பட்டுள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்
இதேநேரம் குழந்தை பிரசவ விடுதி உள்ளிட்ட பல சிகிச்சை தொகுதிகளை கொண்டுள்ள இந்த வைத்தியசாலை நெடுந்தீவு, ஊர்காவற்றுறை ,வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு மண்டைதீவு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய தீவகத்தின் மையப்ப குதியில் அமைந்துள்ளதானது நோயாளர்களின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு நிலையமாகவும் இருந்து வருகின்றது.
அத்துடன் குறித்த வைத்தியசாலைக்கு அவசர நோயாளர் காவு வண்டிகளும் பற்றாக்குறை இல்லாத நிலையே காணப்படுவதாக தெரியவருகிறது.
இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் குறித்த வைத்தியசாலையின் மருத்துவ சேவையை மாலை 6 மணியுடன் நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான அறிவுறுத்தலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது தற்போது புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் புதிய மாற்றங்கள் வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இந்த சேவைக் குறைப்பை இடைநிறுத்தி வைத்தியசாலைக்கான ஆளணி வழங்களை நிவர்த்தி செய்து தொடர்ந்தும் வேலணை மக்களுக்கு குறிப்பாக தீவக மக்களுக்கு 24 மணி நேர சேவையை குறித்த வைத்தியசாலை ஊடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் துறைசார் தரப்பினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் - பு. கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |