யாழில் அநுர தலைமையில் ஆரம்பமான தேசிய வீடமைப்புத் திட்டம்
புதிய இணைப்பு
2026 தேசிய வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப விழா இன்று (16) யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் உள்ள மீசாலை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“நமக்கென்று ஒரு இடம் - ஒரு அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 31,218 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய ஆரம்ப நிகழ்வின் ஒரு பகுதியாக, போரின் விளைவுகளால் முறையான வீடுகள் இல்லாமல் தவிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 2,500 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
தேசிய வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக வீடமைப்பு கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க (Susil Ranasinghe) தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி - மீசாலையில் இன்று (16) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த முயற்சியின் கீழ் இந்த ஆண்டுக்குள் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டங்கள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு யுத்தம்
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு திட்டம், "சொந்தமாக ஒரு இடம் - ஒரு அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் அண்மையில் தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக 2,500 வீடுகளை கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு ஒரு வீட்டிற்கு ஒதுக்கீடு 1.5 மில்லியன் ரூபாய் என்றும், ஆனால் மாவட்ட செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |