காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரத்தை பேசியும்தான் அநுரகுமார ஜனாதிபதி ஆனார்!
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைத் தேடும் தாயின் வலியைப் பற்றி இலங்கையின் இன்றைய ஜனாதிபதி கடந்த ஜனாதித் தேர்தலின்போது பேசிய வார்த்தைகள் இன்னும் நினைவில் உள்ளன.
பிள்ளைக்காக காத்திருக்கும் தாயின் வலியையும் அந்தக் காத்திருப்பின் பின்னால் நீளுகிற துயரத்தையும் அநுரகுமாரவைப் போல எவரும் பேசியிருக்கவில்லை.
ஆனால் அப்படிப் பேசி ஜனாதிபதி ஆகிய பின்னர் அவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் காணாமலே போய்விட்டார்.
ஆகஸ்ட் 30 அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். ஈழம் கனத்த நெஞ்சுடன் சுமந்திருந்த தினமது. வீடுகள் தோறும் வாசல்கள் உண்டென்பதைப் போல, வீடுகள் தோறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெற்றிடங்களால் ஆனது ஈழ நிலம்.
🛑 46 ஒரு தாயின் காத்திருப்பு
மிக மிக அமைதி நிரம்பிய அந்த வீட்டில் ஒரு பெரிய புகைப்படம் இருந்தது. எப்போதும் எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய வகையில். சுவர்கள் இருண்டு கறுத்த அந்த வீட்டில் வெளிச்சம் ஒட்டுவதே இல்லை.
ஒளியிழந்த அந்த வீட்டில் இருப்பது ஒரு தாயும் தந்தையும். அவர்களுக்கு இடையில் வரும் கதைகள்கூட அரிதுதான். அப்படி வந்தாலும் அது தம் மகனைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
சில சமயங்களில் ஆளுக்கொரு திசையிலும் சில தருணங்களில் ஒன்றாகவும் போராட்டத்திற்கென பிள்ளையைத் தேடி அவர்களின் கால்கள் நடக்கத் துவங்கும். உண்மையில் அந்தக் காலடிகளில் எழும் ஓசையில் ஒரு பெரும் நெடும் பயணம் அடித்துக் கேட்கும்.
சிரிப்பென்பதை அறியாத அந்த முகங்களில் கால இருள் அப்பி இருந்தது. அழுத்தம் நிறைந்த அந்த விழிகளில் ஒரு தேசத்தின் கதை தெரிந்தது. பிள்ளையைத் தேடித் தேடியே உருகி முடியும் அந்த முதிய தாய், தந்தையர் ஈழ நிலமெங்கும் உருகித் தீரும் பல்லாயிரம் தாய் தந்தையர்களுக்கு உதாரணமானவர்கள்.
“எங்கள் பிள்ளை வருவான், எங்கள் பிள்ளையை அரசு விடுதலை செய்ய வேண்டும், எங்கள் பிள்ளை வரும் வரை ஓயோம்” என்கிற வெஞ்சினமும் வெந்துயரமும் அவர்களிடம் இருக்கிறதுதான். அதைத்தாண்டி அவர்களின் கண்களில் ஒன்றைக் காணமுடிகிறது. அதைத்தாண்டி அவர்களின் முகம் தீர்க்கமாக ஒன்றை தெளிவுரைக்கிறது. அவர்களின் அடங்காத காலடி ஓசையில் இருந்து ஒரு பெரும் செய்தி புறப்படுகிறது.
🛑 காணாமல் ஆக்கப்படுதல்
ஒகஸ்ட் 30 அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். இந்த நாளைக் கூட காணாமல் போனார் தினம் என்றுதான் நாட்காட்டி நினைவுபடுத்துகிறது. இந்த உலகில் வென்றவர்களாலும் அதிகாரத்தில் இருப்பவர்களாலும்தான் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.எழுதுவிக்கப்படுகிறது.
அதெப்படி ஈழத்தில் மனிதர்கள் காணாமல் போக முடியும்? காற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்களா? வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றார்களா? இல்லை திருவிழாவிலே தொலைந்து போனார்களா? ஈழத்தில் மனிதர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
ஈழ நிலத்தில் உரிமைக்கும் விடுதலைக்குமாக ஈழத் தமிழினம் போராடிய வேளையில் ஈழத் தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். காணாமல் போனோர் என்று சொல்லுகின்ற போது அதில் அரசுகளுக்கும் அடக்குமுறையாளர்களுக்கும் ஒரு சௌகரியமும் தப்பித்தலும் ஏற்படுகிறது.
அவர்கள் காணாமல் ஆக்கிவிட்டு காணாமல் போனோர் என்று சொல்லுவதன் ஊடாக தமது குற்றங்களிலிருந்து நழுவுகிறார்கள். போர் மற்றும் பேரழிப்பு நடந்த ஈழம் போன்ற நாடுகளில் அது சார்ந்த குற்றங்களுக்கு பொறுக்கூறலை செய்ய வேண்டிய நிலைக்கு அரசுகள் தள்ளப்படுகின்ற நிலையில், காணாமல் போனோர் என்றும் காணாமல் போனோர் அலுலகம் என்றும் அமைத்து போர் மற்றும் இனவழிப்பு சார்ந்த குற்றங்களில் இருந்து தம்மை பாதுகாக்க முற்படுகின்றனர்.
உண்மையில் அரசாலும் அடக்குமுறையாளர்களாலும் இனவழிப்பு நோக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற கொடூர யதார்த்த நிலையை நாம் உரத்துச் சொல்ல வேண்டும்.
🛑 திட்டமிட்ட செயல்
அப்படி என்றால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் என்றே நாம் அழைக்க வேண்டும். காணாமல் போனோர் தினம் என்று அழைப்பவர்களுக்கு இடித்துரைக்க வேண்டும்.
உலக நாடுகளில் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கூட்டமைப்பு இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுத்தது.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை சார்ந்த அமைப்புகள் இந்த தினத்தை அனுஷ்டிக்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
உலகம் முழுவதிலும் காணாமல் ஆக்கப்படுதல் என்ற மனித குல விரோதமான செயல் நிகழ்த்தப்படுகிறது. இதனால் உலக அளவில் பல குடும்பங்களும் மனிதர்களும் சிதைவு நிலைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். ஈழம் போல இன ரீதியான ஒடுக்குமுறைகள், அடங்குமுறைகள் நிகழ்த்தப்படுகின்ற நாடுகளில் திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு உபாயமாக காணாமல் ஆக்கப்படுதல் முன்னெடுக்கப்படுகின்றது.
🛑 காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள்
ஈழத்தில் 2009 இல் நடந்த இறுதிப் போரின் போது போர்க்களத்தில் இருந்து இலங்கை இராணுவத்திடம் சரணடையச் சென்றவர்களில் பலர் இடைநடுவே காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
இராணுவத்தின் களத்தில் அவர்களுக்கு இடைநடுவே என்ன நடந்தது என்ற உண்மை இன்னமும் வெளி உலகதிற்கு வெளிச்சப்படுத்தப்படாத நிலை நீடிக்கிறது. அத்துடன் இராணுவத்திடம் சென்று சரணடைந்தவர்கள் பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தாய்மாரும், தந்தையர்களும், மனைவிமாரும் இராணுவத்தின் கைகளில் ஒப்படைத்த பல ஆயிரக்கணக்கானவர்கள், அரசின் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் இன்றுவரையில் விடுவிக்கப்படவில்லை.
குடும்பம், குடும்பமாக பலர் சரணடைந்தார்கள். போராளி, மனைவி மற்றும் பிள்ளைகள் என குடும்பங்களாக சரணடைந்தவர்களின் நிலை என்ன என்று அறியப்படவில்லை. அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாத மர்மம் நீடிக்கிறது.
ஈழ இறுதிப் போர் களத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சுமார் ஐம்பதாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்ற புள்ளி விபரங்களையும் சுயாதீன அமைப்புகள் எடுத்துரைக்கின்றன. அத்துடன் இறுதிப் போர்க்களத்தில் சுமார் 50 குழந்தைகள் சரணடைந்திருக்கிறார்கள். அந்த ஐம்பது குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்ற குரூரமும் வெளித்தெரியாதுள்ளது.
🛑 பாலச்சந்திரன் எனும் நான்
உலகில் குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுதலில் இலங்கை முன்னணி வகிக்ககூடிய நாடு என்பதற்கு ஈழ இறுதிப் போரில் இல்லாமல் செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் சாட்சியம் ஆகின்றனர். இறுதிப் போரில் சரணடைந்து மார்பில் இரும்புத் துப்பாக்கியை வைத்து பாலகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
அப்பாவியாக நிராயுதமாக சரணடைந்த சிறுவன் பாலச்சந்திரனுக்கு நடந்த கொடூரம் வாயிலாக, ஈழ இறுதிக் களத்தில் ஈழக் குழந்தைகள் எதிர்கொண்ட குழந்தைகள்மீதான இனவழிப்புப் பேரவலம் வெளிப்பட்டு நிற்கிறது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் குறித்து உலக அரசியலில் அதிகமும் பேசப்படுகிறது. தாயின் கருவறையில் இருந்து குண்டுகளால் கிழிக்கப்பட்டு கொல்லப்பட்ட குழந்தை முதல் இறந்த தாயின் மார்பில் பால் குடித்த குழந்தை துவக்கம், போரின் முடிவில் அப்பாவிகளாய் ஏதும் அறியாமல் சரணடைந்த நிலையில் இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியாத எங்கள் ஈழக் குழந்தைகளின் நிலையை பன்னாட்டு சிறுவர் உரிமை அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வேடிக்கையும் உலகத் துயரத்தின் முகாந்தரமுமாகும்.
இலங்கைத் தீவு ஈழக் குழந்தையர்களின் குருதியாலும் ஈழத் தாய்மார்களின் கண்ணீராலும்தான் நனைந்திருக்கிறது. எதிர்கட்சியில் இருக்கும் போது தமிழ் மக்களின் அத்தனை விடயங்களையும் அறிந்தவர்களாக உணர்ந்தவர்களாக ஶ்ரீலங்கா அரசியல்வாதிகள் பேசுவார்கள். ரணிலும் அதைச் செய்தார். அநுரகுமார தரப்பும் அதைச் செய்தது.
போர் முடிந்த பின்னர் வடக்கு கிழக்கிற்கு வந்த ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக களமாடிய கதைகளை நாம் எளிதில் மறக்க முடியாது. தாம் ஆதரித்து அனுசரனை அளித்த போரினால் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தாமே போராடிய கதை அது. இன்று கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவும் மற்றும் ரணில் விக்ரமசிங்கவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் கள்ள மௌனம் சாதித்து இனப்படுகொலையாளிகளைக் காப்பாற்றியதுபோலவே இன்றைய அநுர அரசும் இருக்கிறது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கண்ணீருக்கு விடை தேடாது இந்தத் தீவு அமைதி கொள்ளாது என்பது மட்டும் திண்ணம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 30 August, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

