உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அநுரவின் நிலைப்பாடு
தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று (07.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சித்திரை புத்தாண்டுக்கு முன்பே தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்திருந்தோம்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
பாதீட்டு திட்டம் மீதான விவாதம் இடம்பெறுவதனால் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.
இதன்படி, மார்ச் மாதம் 21ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதியை அறிவித்தது. அதற்கமைய தேர்தல் மே மாதம் நடத்தப்படவுள்ளது.
எனவே, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு அமைய, உரிய முறையில் தேர்தல்கள் ஆணைக்குழு திகதியைத் தீர்மானித்திருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும்.
தேர்தல்கள் ஆணைக்குழு
தொடர்ந்தும் தேர்தலை நடத்திக் கொண்டிருப்பதற்கு நேரத்தைச் செலவிட முடியாது. எனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிக்கு அமைய, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பாரிய வேலைத்திட்டங்களைச் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெவ்வேறு நிபந்தனைகள் காரணமாக எம்மால் பணியாற்ற முடியாமல் உள்ளது.
8 இலட்சம் குடும்பங்களுக்கு மானிய விலையில் நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு அதனையும் தடுத்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
