எரிசக்தி சந்தையை கட்டுப்படுத்த ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு: ரஷ்ய எண்ணெய்க்கு திடீர் அனுமதி!
ஈரான் போரினால் சீர்குலைந்துள்ள உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெய் விநியோகத்தைச் சந்தைக்குக் கொண்டுவர அனுமதிப்பதாக அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரின் விளைவாக விண்ணைத் தொடும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, அமெரிக்கா தனது மூலோபாய பெற்றோலிய இருப்பிலிருந்து 172 மில்லியன் பேரல் எண்ணெயை விடுவிக்கும் என்று அமெரிக்க எரிசக்தி துறை அறிவித்திருந்தது.
எண்ணெய் விலைகள்
இந்தநிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், பெஞ்ச்மார்க் எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு 100 டொலரைத் தாண்டிய நிலையில் இந்த நடவடிக்கை மிகவும் குறுகிய காலத்திற்குரியது என்றும் இது ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மைகளை வழங்காது என்றும் பெசன்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மார்ச் 12 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகளை விநியோகம் செய்ய ஏப்ரல் 11 நள்ளிரவு வரை செல்லுபடியாகும் வகையில் விசேட உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
எரிசக்தி விலை
அத்தோடு, எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக வளைகுடா பிராந்திய கடல் வர்த்தகத்திற்குப் பாதுகாப்பு மற்றும் நிதி உத்தரவாதங்களை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதுடன், அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையே எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்த ஜோன்ஸ் சட்டத்தை (Jones Act) தற்காலிகமாக நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், உலகளவில் 30 வெவ்வேறு இடங்களில் சுமார் 124 மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெய் கடலில் தேங்கியுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த அனுமதி சுமார் ஐந்து முதல் ஆறு நாட்களுக்குத் தேவையான விநியோகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் வளைகுடா பிராந்தியத்திலிருந்து எண்ணெய் விநியோகத்தை முழுமையாகத் தடுப்போம் என்று ஈரானின் புரட்சிகர இராணுவப் படை எச்சரித்துள்ளது.
சந்தைக்குக் கூடுதல் எண்ணெயைக் கொண்டு வருவது மற்றும் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது போன்ற அதிரடி மாற்றங்கள் மூலம் எண்ணெய் விலையைக் குறைக்க ட்ரம்ப் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |