யாழில் இராணுவ ஆக்கிரமிப்பு நிலங்களில் அநுரவின் நடைபயணம்
இன்று காலை பலாலி வடக்கின் அந்தோனிபுரம் வீதியில் வடக்கில் ஆக்கிரமித்து குடியிருக்கும் இராணுவத்தினர் சகிதம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஜனாதிபதி.
நேற்று யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மக்களிடம் பேசும்போது எமது ஆட்சிக்கு யாழ்.மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், “ஆட்சி மாற்றம் ஒன்றை நாட்டு மக்கள் விரும்பினார்கள் அதற்கு தமிழ் மக்களும் எம்மோடு கைகோர்த்து ஏற்படுத்திய அரசாங்கமே இன்று செயற்படுகிறது.
கடந்த கால அரசாங்கங்களில் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அவர்களைப் புறந்தள்ளி புதிய அரசாங்கத்தை எம்மிடம் கையளித்தார்கள் அதனை நாம் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
யாழ். மக்கள் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு தமது பங்களிப்பை வழங்கினார்கள் அவர்களின் எதிர்பார்ப்பை நாம் சிதறடிக்க மாட்டோம் என இந்தப் பொங்கல் நாளில் கூறி வைக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
உண்மையில் வார்த்தைக்கு வார்த்தை இனவாதத்தை தோற்கடித்தோம் சமத்துவமான நாட்டை உருவாக்குவோம் என்று மார்த்தட்டிக்கொண்டிருக்கும் ஜனாதிபதிதான் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் நிலங்களின் மீது நடை பயின்றுகொண்டிருக்கின்றார்.
எளிமையான ஜனாதிபதி தோழர் என்று கொண்டாடும் உங்கள் ஜனாதிபதிக்கு எளிய மக்களின் நிலங்களை பிடித்து ஆக்கிரமித்து வைப்பது தவறென்று தெரியும்தானே?விடுவிப்பாரா?
வட்டக்கச்சி விவசாய அரச பண்ணையில் 415 ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.
வெள்ளாங்குளத்தில் 500 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது.
தேராவிலில் 1,200 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது.
முட்கொம்பனில் 100 ஏக்கர் தென்னம் தோட்டம் இராணுவம் வசம் இருக்கிறது.
முழங்காவிலில் 1,800 ஏக்கர் மரமுந்திரிகை தோட்டத்தில் பெரும்பகுதி இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.
சாந்தபுரத்தில் 680 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.
ஜெயபுரத்தில் 120 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.
மலையாளபுரத்தில் 798 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.
தேறாங்கண்டல் பல நூறு ஏக்கர் விவசாய பண்ணையும் இன்னமும் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது.
இது போதாதென்று யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட வளமான விவசாய நிலமும் இராணுவம் வசம் இருக்கின்றது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாய பண்ணைகளை விருத்தி செய்தால் வடக்கு மகாணமே இலங்கை தீவின் விவசாய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு கணிசமாக பங்களிக்க முடியும்.
குறிப்பாக இந்த பண்ணைகளில் சேமிப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வடிகால் வெள்ளத்தடுப்பு அணைகளை மேம்படுத்தி உற்பத்தித்திறன் மேம்பாடு, பௌதிக வள மேம்பாடு, நிலத்தடி நீர் முகாமைத்துவம்,போன்ற மாற்றங்களை செய்து விவசாய சமூகத்தை வலுவடைய செய்ய முடியும்.
உள்ளூர் விதை உற்பத்தி , சேவைகால பயிற்சிகள் , விவசாய தொழில்நுட்ப விரிவாக்கம் போன்ற பல்வேறு விடயஙக்ளுக்கு மேற்படி பண்ணைகளை பயன்படுத்த முடியும்.
அதே போன்று சரியான உள்ளூடுகள் , இயற்கை உரம் போன்ற அடிப்படை விடயங்களை விவசாயிகளுக்கு உரிய நேரங்களில் இந்த பண்ணைகளை மக்கள் மயப்படுத்துவதன் ஊடக பெற்று கொடுக்க முடியும்.
மறுபுறம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன.
அதேபோல் மன்னாரில் 140,000 கால்நடைகள், வவுனியாவில் 130,000 கால்நடைகள் உள்ளன.
இவ்வாறு தேசிய பால் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள 370,000 கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை இராணுவம், வன வள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட ஒற்றையாட்சி கட்டமைப்புகள் ஆக்கிரமித்து இருக்கின்றன.
அதாவது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வடக்கின் விவசாய மற்றும் விலங்கு வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தை இன்னமும் முழுமையாக முடக்கி வைத்திருக்கின்றார்கள்.
இவ்வாறு முடக்கி வகிக்கப்பட்டிருக்கும் விவசாய பொருளாதாரத்திற்கு குறைந்த பட்ச தீர்வை பெற்று கொடுக்க தயாரில்லாத ஜேவிபி ஆட்சியாளர்கள் யாழ்ப்பாணத்தில் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அரச பொது நிதியில் தைபொங்கல் கொண்டாடுகின்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |