ஈழத் தமிழர்களை தேடிச் செல்லும் அனுர
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் அவர் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் வேளை வவுனியாவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதுடன் அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்வுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
இதனையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள அவர், இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பதோடு பொதுமக்கள் சந்திப்பில் பங்கேற்று, தொடர்ந்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு தற்போது ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |